கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மாவட்ட ரீதியில் காணிகள் தெரிவு செய்யப்படவுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் பொருத்தமான காணிகள் தொடர்பில் தாமதமின்றி அறிவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்த்தன அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ள விடயங்களை உள்ளடக்கிய பொருத்தமான காணியை தெரிவு செய்யுமாறே மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்படும் இடங்கள் கொரோனா தொற்றினால் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்குப் பொருத்தமான இடமா? என்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ஆராயப்பட்ட பின்பே அனுமதி வழங்கப்படுமெனவும் அவர் கூறினார். தற்போது மட்டக்களப்பு, ஓட்டமாவடி சூடுபத்தினசேனையில் சுமார் 40 சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, கொரோனா தொற்று காரணமாக மரணிக்கும் காலி மாவட்ட முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கு காலி மாவட்டத்தில் 04 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த 04 இடங்களின் பெயர்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் காலி மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் மொஹமட் சகுர்தீன் தெரிவித்தார்.
மேலும் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா ஆகிய பகுதிகளிலும் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.