தலவாக்கலை லிந்துலை நகர சபையில் முன்னெடுக்கப்படவிருந்த தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண நிர்வாக ஆணையாளர் மேனக ஹேரத் தலைமையில், இன்று லிந்துலை நகர சபையின் மண்டபத்தில் இந்த தேர்தல் முன்னெடுக்கப்படவிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
- Advertisement -
தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர் பதவி மற்றும் உறுப்பினர் பதவி ஆகியவற்றில் இருந்து அசோக சேபால அண்மையில் பதவி விலகியிருந்தார். இதனையடுத்தே, வெற்றிடமாகவுள்ள தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று முன்னெடுக்கப்படவிருந்தது.
- Advertisement -

இந்நிலையில், வெற்றிடமாகவுள்ள தலவாக்கலை லிந்துலை நகர சபை உறுப்பினர் பதவிக்கு ஒருவரை தேர்ந்தெடுக்காமல், புதிய தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்துவது, முன்னாள் தலைவரை தெரிவு செய்த சுயாதீனக் குழுவுக்கு அநீதியான விடயமாகும் என குறிப்பிட்டு, அசோக சேபாலவினால், கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், தனது சுயாதீன குழுவில் இருந்து புதிய நபர் ஒருவர் லிந்துலை நகர சபை உறுப்பினர் பதவிக்கு தெரிவு செய்யப்படும் வரை, தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும் அவர் கோரியுள்ளார். இதற்கமைய, லிந்துலை நகர சபையில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு, மத்திய மாகாண நிர்வாக ஆணையாளர் மேனக ஹேரத் மற்றும் தலவாக்கலை லிந்துலை நகர சபை செயலாளர் ஆகியோருக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.