மன்னாரில் பாடசாலை அதிபரை இடம் மாற்றக் கோரி பெற்றோர்கள் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
மன்னார் சிலாவத்துறை மன்-முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் அதிபரினால் மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரியும் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவனுக்கு இன்று திங்கட்கிழமை (3) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
- Advertisement -
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
மன்-முள்ளிக்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் அதிபரினால் அப்பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலையில் வைத்து கடந்த 27 ஆம் திகதி கடுமையாக தாக்கப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக சிறுவர் துஸ்பிரையோக மையத்திற்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸாரின் விசாரணையின் பின்னர் வைத்திய அதிகாரியின் மருத்துவ சான்றிதழின் பிரகாரமும் நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
ஆகவே நாம் நீதிமன்றத்தை நாடிச் செல்லாது சுமூகமான தீர்வை ஏற்படுத்திக் கொள்ள உடனடியாக குறித்த அதிபரை இடமாற்றம் செய்து தருமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றச்சாட்டுக்குள்ளான அதிபர் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட வேண்டியவர். அதிபர் தொடர்பாக ஏற்கனவே மன்னார் வலயக்கல்வி அலுவலகம், வடமாகாண கல்வி அமைச்சு, வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு பல தடவைகள் முறைப்பாடு செய்தும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
சுமார் 8 வருடங்களுக்கு மேலாக அதிபர் தகமை அற்ற ஒர் ஆசிரியர் ஒரு பாடசாலையில் இத்தனை வருடங்கள் அதிபராக கடமையாற்றுவது வட மாகாண கல்வி அமைச்சின் செயல்திறன் குறித்து கேள்விகள் எம்முள் எழுப்புகின்றது. வார்த்தைப் பிரையோகம், ஒழுக்க நெறிமுறைகளை பின்பற்ற முடியாத ஒருவர் அதிபராக கடமையாற்றுவது என்பது எவ்வாறு கல்வி ஒழுக்க விழுமியங்களை மாணவர்கள் மத்தியில் சரியான வகையில் எடுத்துச் செல்லப்படுகின்றது? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இவர் தொடர்ந்தும் அதிபராக கடமையாற்றும் பட்சத்தில் பாதீக்கப்பட்ட மாணவர்களின் எதிர் காலத்தின் மீதும் பெற்றோர்களான எங்கள் மீதும் கொண்டுள்ள காழ்புணர்ச்சி அதிகரிக்கப்பட்டு மாணவர்களின் மனங்களிலும், கல்வியிலும் பாரிய பின்னடைவை எதிர் நோக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே குறித்த அதிபரை இப்பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யாத பட்சத்தில் மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடை விலகலை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே பாடசாலை மற்றும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு குறித்த அதிபரை இடமாற்றம் செய்து மாணவர்களின் மனங்களில் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.