இலங்கையின் வட பகுதியில் பிறிதொரு தனியாட்சியை உருவாக்குவதற்காக அமெரிக்காவினால் ரகசிய நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வந்தாக கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்திக் குறிப்பில் – அமெரிக்காவின் முக்கியமான அரச சார்பற்ற நிறுவனமாகிய யூ.எஸ்.எயிட் நிறுவனம் இவ்வாறு இலங்கையில் தனிநாட்டை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் 500 மில்லியன் டொலர்கள் யூ.எஸ்.எயிட் என்கிற அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் செலவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்த தகவல்கள் கசியத் தொடங்கிய நிலையில் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் உயர் அதிகாரியான ட்ரவிஸ் காட்னர், அரச சார்பற்ற நிறுவன அமைப்பின் பொதுச் செயலாளர் அலுவலகத்தினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஆனாலும் அந்த அழைப்பினை அவர் நிராகரித்து வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இரகசிய செயற்பாட்டிற்குப் பின்னால் உள்ள தமிழர் ஒருவரையும் மேற்படி அரச சார்பற்ற நிறுவனங்களின் அமைப்பின் பொதுச்செயலாளர் செயலகம் அடையாளம் கண்டுள்ளது. யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் உயரதிகாரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான வீசா செயற்பாடுகளை நீதியமைச்சே மேற்கொண்டுள்ளது.
வடமாகாணத்தில் தனியான நாடொன்றை உருவாக்கும் இந்த ரகசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக மொனராகலை மாவட்டத்தில் ஓர் அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.