கண்டி, தெல்தெனிய பகுதியில் சுற்றிவளைப்பின் போது பொலிஸாரை கோடரியால் தாக்க முற்பட்ட சந்தேக நபரின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதனால் காயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
- Advertisement -
தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகன -ஹம்பகாவத்த பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸ் குழுவொன்று குறித்த பகுதிக்குச் சென்றுள்ளதுடன், இதன்போது அங்கிருந்த சந்தேக நபரொருவர் கோடரியால் பொலிஸாரை தாக்க முற்பட்டுள்ளார். பின்னர் பொலிஸார் குறித்த சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதன்போது காயமடைந்த நபரை கைது செய்த பொலிஸார் சிகிச்சைக்காக அவரை கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதன்போது அங்கிருந்த மேலும் நான்கு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் தெல்தெனியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல்கள், கால்நடை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியந்துள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்களுள் சிறைச்சாலையில் இருந்து தப்பி வந்த கைதி ஒருவரும் உள்ளடங்குகின்றார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்