தொற்றுநிலைமை சற்று தீவிரம் அடையலாம் என எதிர்பார்க்க படுவதனால் பொதுமக்கள் விழிப்பாக செயற்படுங்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் தற்போது உள்ள கொரோணா நிலைமைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
- Advertisement -
யாழ் மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமை கடந்த வாரம் சற்று அதிகரித்த நிலைமை காணப்பட்ட போதிலும் இந்த வாரம் சற்று கொரோனா தொற்று நிலைமை சற்று குறைவடைந்து காணப்படுகின்றது. நேற்று மாலை கிடைத்த பிசிஆர் பரிசோதனை அடிப்படையில் 14 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் 1155 பேருக்கு கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 639 நபர்கள் பூரண சுகமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். 17 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலைமையில் யாழில் 1547 குடும்பங்களைச் சேர்ந்த 4417 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
தொடர்ச்சியாக பிசிஆர் பரிசோதனைகள் மக்கள் கூடும் இடங்களிலும் வர்த்தக நிலையங்களை அண்டிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இது எழுமாறாக இடம்பெற்று வருகின்ற ஒரு செயற்பாடாக இருக்கின்றது. கடந்த வாரமளவில் திருநெல்வேலியில் முடக்கப்பட்ட இந்த கிராமத்தில் ஒரு பகுதியினை தவிர்ந்த ஏனைய பகுதியினை விடுவித்திருந்தோம். மேலும் பாரதி புரம் என்னும் கிராமம் நாளை காலையில் இருந்து விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர்கள் எடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
அங்கு நேற்று 97 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி சிஆர் பரிசோதனைகளில் மூன்று நபர்களுக்கு மாத்திரமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பபட்டுள்ளது. ஏனையோருக்கு தொற்றில்லை அந்த நிலைமை திருப்தியாக உள்ளது காரணமாக நாளைய தினம் திருநெல்வேலி பாரதிபுரம் கிராமம் நாளைய தினம் கண்காணிப்பு வலயத்தில் இருந்து விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு ள்ளோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்தொகை உணவுப் பொதிகள் வழங்கி வருகின்றோம். 4823 குடும்பங்களுக்கு 50.49 மில்லியன் ரூபா அதற்கென செலவிடப்பட்டுள்ளது. மேலும் யாழ் மாவட்டத்தில் தனியார் மற்றும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் திட்டமிட்டபடி ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றது.
அதற்குரிய சுகாதார வழிமுறைகளை சுகாதார வழிகாட்டல்களையும் சுகாதார மற்றும் கல்வி அமைச்சு இணைந்து மேற்கொண்டுவருகின்றன. அதன் அடிப்படையில் அதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு கல்வி செயற்பாடுகள் வழமைபோல் யாழ்மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.
தொற்று நிலைமை சற்று தீவிரம் அடையலாம் என எதிர்பார்க்க படுவதன் காரணமாக பொதுமக்கள் சற்று விழிப்பாக செயற்பட வேண்டும். குறிப்பாக நகரப்பகுதி மற்றும் மக்கள் ஒன்று கூடும் இடங்கள் பொது மக்கள் அவதானமாக தங்களுடைய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அநாவசிய நடமாட்டங்களை தவிர்த்து தேவையானவற்றுக்கு மாத்திரம் வருகை தரலாம். அவ்வாறு வரும்போது முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளி போன்றவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதே நேரத்தில் யாழ் நகரப்பகுதியில் ராணுவத்தினரால் தொட்டு நீக்கி திரவம் விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். சுகாதாரப் பகுதியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
இந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தினை ஒரு தொற்றில்லாத பாதுகாப்பான நிலையில் வைத்திருப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கின்றோம். தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அந்த விழிப்புணர்வுகளை செவி மடுத்து பொதுமக்கள் ஒழுகுவது முக்கியமானது.
அதாவது எதிர்வரும் காலப்பகுதியில் சற்று இந்த தொற்று நிலைமை தீவிரமாக லாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதனை சுகாதார அமைச்சு மற்றும் கோவிட் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்திருக்கின்றது.
எனவே அவற்றுக்குத் தக்கவாறு சில முன்னேற்பாடுகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையிலே பொது மக்களுடைய ஒத்துழைப்பு மிக அவசியமானது. அதேநேரத்தில் சில கூட்டங்கள் ஏற்பாடுகளை செய்யும் போது அதற்குரிய நடைமுறைகளை அனுமதி பெற்று சுகாதாரப் பகுதியினர் ஆலோசனைகளை பெற்று செயற்படுதல் மிக அவசியமாகும் என்றார்.