சட்ட விரோதமான துப்பாக்கிகளை வைத்திருந்தமை தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது , சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை வைத்திருந்தமை தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொரவ்பொத்தானை – துட்டுஹேவ பகுதியில் 62 வயதுடை நபரொருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கலவானை – கொஸ்வத்த பகுதியில் துப்பாக்கியுடன் 58 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -
இந்நிலையில் மீரிகம – பமுனுவத்த பகுதியில் 31 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து துப்பாக்கி ஒன்றும், 5 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. தினியாவல பகுதியில் 36 வயதுடைய நபரொருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , கலஹா – பன்னிலவத்த பகுதியில் குழல் 12 ரக துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அனுமதி இன்றி எவருமே துப்பாக்கிகளை வைத்திருக்க முடியாது. அவ்வாறு வைத்திருத்தலானது குற்றச்செயற்பாடாகவே கருதப்படும். அதனால் இது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை இவ்வாறு சட்டவிரோதமான துப்பாக்கிகளை வைத்திருக்கும் நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப்பெற்றால், அதனை 1997 என்ற இலக்கத்தை தொடர்புக் கொண்டு தெரிவிக்க முடியும். இதன்போது முக்கியமான தகவல்களை வழங்கும் நபர்களுக்காக பெறுமதிமிக்க சன்மானங்களும் வழங்கப்படும் என்றார்.