ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தற்போது நாட்டிற்கு அத்தியாவசியமானதாகியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாத்திரமல்ல ஆளும் கட்சியிலிருந்தும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். எனவே நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டும் நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டும் சாதகமான தீர்மானத்தை எடுத்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதனடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளவுள்ளார். கடந்த பொதுத்தேர்தல்களில் பின்னடைவுகளை சந்தித்திருந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனமே உரித்தானது.
இந்த தேசிய பட்டியல் ஆசனத்தில் யார் நாடாளுமன்றம் செல்வது என்ற இழுபறி நிலை மிக நீண்ட காலமாக காணப்பட்டது. இவ்வாறானதொரு நிலையில் பலரினதும் வேண்டுக்கோளுக்கிணங்கி, தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுக்கொள்ள ரணில் விக்ரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.