HomeAstrologyவிருச்சிகம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை

விருச்சிகம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை) பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்)

விருச்சிக ராசி நேயர்களே! பிறக்கும் புத்தாண்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், சுக்ரனோடு பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கின்றார். தொழில் ஸ்தானாதிபதி சூரியன், லாப ஸ்தானாதிபதி புதனோடு இணைந்து புத – ஆதித்ய யோகத்தை உருவாக்குகின்றார். எனவே இந்த ஆண்டு தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக அமையும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். இல்லம் தேடி நல்ல தகவல்கள் எந்த நேரமும் வந்த வண்ணமாகவே இருக்கும்.

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியையே பார்க்கின்றார். எனேவ தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். ஜீவன ஸ்தானத்தில் கூட்டுக்கிரகமாக சூரியன், சந்திரன், புதன், சுக்ரன் சஞ்சரிக்கின்றன. புத – சுக்ர யோகம் இருப்பதால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். வேலைவாய்ப்பில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். இடம் வாங்கி வீடு கட்டும் யோகம் கூட எளிதில் நடைபெறும். குறிப்பாக முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க அஸ்திவாரம் அமைத்துக் கொடுக்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமையப் போகின்றது.

தற்சமயம் ஏழைரச் சனி விலகிவிட்டதால், இனி தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். துணையாக இருக்கும் நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர். வெற்றிச் செய்திகள் வீடு தேடி வந்து சேரும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். சனி பகவான் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ, அதை அந்த நேரத்தில் செய்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை வருடத் தொடக்கத்திலேயே வரலாம். மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.

4-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிப்பது யோகம்தான். அா்த்தாஷ்டம குருவாக இருந்தாலும், அவர் தன ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதி என்பதால் பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்கக்கூடிய சூழ்நிலையும், மறக்க முடியாத சம்பவங்களும் நிறைய நடைபெறும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். பிரபலஸ்தர்கள் உங்கள் பின்னணியாக இருந்து, பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். ஆபரணங்கள் வாங்குவது முதல் அழகான வாகனம் வாங்குவது வரையான யோகம் படிப்படியாக வந்துசேரும்.

ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் இருப்பதால் சர்ப்பக் கிரகங்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கின்றது. எனவே சா்ப்ப சாந்திப் பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலம், சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும். ஜென்ம கேதுவால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் வரலாம். பயணங்கள் அதிகரிக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட எடுத்த புது முயற்சி கைகூடும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலும்.

குருவின் வக்ர இயக்கம்
ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். அதோடு 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். 14.9.2021 முதல் 12.10.2021 வரை மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. தன ஸ்தானத்திற்கு அவர் அதிபதி என்பதால், தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டேயிருக்கும். பொதுவாக உங்கள் ராசியானது, மனதுகாரகன் சந்திரன் நீச்சம் பெறும் ராசியாகும். எனவே இதுபோன்ற காலங்களில் சிந்தனை அதிகரிக்கும். ‘இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா?’ என்ற மனக்குழப்பம் ஏற்படும். பிறருக்கு வாங்கிக் கொடுத்த தொகையை போராடி திரும்பப் பெறக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

குருப்பெயா்ச்சி காலம்
ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குருபகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன்பிறகு 13.4.2022-ல் மீன ராசிக்குப் பெயா்ச்சியாகிச் செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றிபெறும். வரன்கள் வாசல் தேடிவரும். வெளிநாடு செல்லும் வாய்ப்போ, வெளிமாநிலங்கள் செல்லும் வாய்ப்போ கைகூடலாம்.

குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். எதையும் துணிந்து செய்யும் ஆற்றலால் வெற்றி வாய்ப்புகளைக் காண்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். மனதிலுள்ள தேவையற்ற பயம் விலகும். திட்டமிட்ட பணிகளை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். மேலிடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். போட்டிகளுக்கு மத்தியில் உங்கள் முன்னேற்றம் அதிகரிக்கும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

ராகு-கேது பெயா்ச்சி காலம்
21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 6-ம் இடத்திற்கு ராகுவும், 12-ம் இடத்திற்கு கேதுவும் வருகின்றார்கள். இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்களின் பட்டியலில் உங்கள் பெயரும் இணையும் விதத்தில், நல்ல காரியங்கள் பலவற்றையும் செய்து முடிப்பீர்கள். 6-ல் ராகு இருந்து, குரு கேந்திரத்தில் இருந்தால் ‘அஷ்டலட்சுமி யோகம்’ என்பார்கள். அந்த யோகம் உங்களுக்கு வரப்போகின்றது. எனவே எல்லா வழிகளிலும் நற்பலன்கள் கிடைக்கும்.

சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனிபகவான் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனிபகவான். எனவே உடன்பிறப்புகளின் வழியே கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம் இது. வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும் என்றாலும் நம்பிக்கைக்குரிய விதம் இருக்குமா? என்பது சந்தேகம்தான். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல்கள் தோன்றும். உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி காண இயலும்.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய்- சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் பாகப்பிரிவினைகளில் மீண்டும் பிரச்சினை தலைதூக்கும். பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். உடன்பிறப்புகளுக்கும், உறவினர்களுக்கும் நீங்கள் எவ்வளவுதான் நன்மைகள் செய்தாலும், குடும்பத்தினர் குறை கூறிக் கொண்டேயிருப்பர். வீடுமாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை திருப்தி அளிக்கும் விதத்தில் அமையாது. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளலாம். இடம், பூமி வாங்க நினைப்பவர்கள் பத்திரப்பதிவில் முழுமையாகக் கவனம் செலுத்துங்கள்.

பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு பொன் கொழிக்கும் ஆண்டாக அமையப் போகின்றது. பொருளாதார நிலை உயரும். புதிய வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. கணவன் – மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். கல்யாண முயற்சிகள் கைகூடலாம். தாய் மற்றும் உடன்பிறப்புகள் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பர். பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். சம்பள உயர்வும் உண்டு. ஆனைமுகப் பெருமான் வழிபாடும், ஆறுமுகப் பெருமான் வழிபாடும் நன்மை தரும்.

வளர்ச்சி தரும் வழிபாடு
சதுர்த்தி விரதமிருந்து ஆனைமுகப் பெருமானை வழிபடுவதோடு, வெள்ளிக்கிழமை தோறும் கவசம் பாடி சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்களை வழிபட்டு வந்தால் செல்வ வளம் பெருகும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments