HomeAstrologyதுலாம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை

துலாம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)

துலாம் ராசி நேயர்களே! பிறக்கும் புத்தாண்டு அா்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கத்தோடும், அஷ்டமத்தில் ராகு, செவ்வாய் சோ்க்கையோடும், இரண்டில் கேதுவின் சஞ்சாரத்தோடும் பிறப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் தானாக வந்து சேரும். தடைகளையும், தாமதங்களையும் தகர்த்து எறிய வேண்டுமானால் அவ்வப்போது திசாபுத்திக்கேற்ற தெய்வங்களை வழிபடுங்கள். ஆரோக்கியத்தில் சிறு அச்சுறுத்தல் ஏற்பட்டு அகலும்.

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், புதனோடும், சூரியனோடும் இணைந்து சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். புத-சுக்ர யோகம், புத -ஆதித்ய யோகம் ஆகியவற்றோடு, செவ்வாய், சுக்ரன் பரிவர்த்தனை யோகமும் பெற்றிருக்கின்றது. அஷ்டமாதிபதி பரிவா்த்தனை பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எதிரிகளை நம்பி ஏமாறும் சூழ்நிலையும், தொழிலில் இழப்புகளும் ஏற்படலாம். வரவைக் காட்டிலும் செலவு இருமடங்காகும். ‘வாங்கிய சொத்தை விற்க நேரிடுகிறதே’ என்று கவலைப்படுவீர்கள். முன்னேற்றத்தில் குறுக்கீடு சக்திகள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

2-ல் கேது இருப்பதால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. குடும்பப் பிரச்சினை அதிகரிக்கும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஆரோக்கியத் தொல்லைகளும், வைத்தியச் செலவுகளும் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். சென்ற ஆண்டில் சேமித்த சேமிப்புகள் இப்பொழுது கரையத் தொடங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் பணியாளர்களால் தொல்லைகள் அதிகரிக்கும். தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்கள் பக்கபலமாக இருப்பது அரிது.

5-ல் குரு சஞ்சரிப்பதால் அதன் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. ‘ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக் கிரகமான குருவின் பார்வை பலன் தருமா?’ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதற்கு ஏற்ப, ஓரளவாவது தீமைக்கு நடுவில் நன்மை உருவாகும். மேலும் புத்திரகாரகன் குரு புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ, படிப்பிற்கேற்ற வேலை சம்பந்தமாகவோ நீங்கள் செய்யும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். ‘எண்ணற்ற வரன்கள் வந்தும் இதுவரை ஒன்றும் முடிவடையவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்போது திருமண வாய்ப்பு கைகூடும்.

அா்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் சுக ஸ்தானம் பலமிழக்கின்றது. எனவே ஆரோக்கியத்தில் தொல்லைகள் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால் ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்த வேண்டும். எந்த வேலையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். தொழில், உத்தியோகம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பிறரிடம் பொறுப்பை ஒப்படைக்கும் பொழுதோ, பொறுப்புச் சொல்லி தொகை வாங்கிக் கொடுக்கும் பொழுதோ ஒருகணம் சிந்திப்பது நல்லது.

குருவின் வக்ர இயக்கம்
ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். மீண்டும் 14.9.2021 முதல் 12.10.2021 வரை மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குருபகவான். அவர் வக்ரம் பெறுவது யோகம்தான். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். சகோதரர்கள் உங்கள் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக முடியும்.

குருப்பெயா்ச்சி காலம் ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குருபகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன்பிறகு 13.4.2022-ல் மீன ராசிக்குப் பெயா்ச்சியாகி செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும்பொழுது, அதன் பார்வை உங்கள் ராசியில் பதிவதோடு 9, 11 ஆகிய இடங்களிலும் பதிகின்றது. எனவே ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்சாகத்துடன் பணிபுரிந்து உழைப்பால் உயர்வீர்கள். நல்ல இடமாற்றம், பணி மாற்றம் ஏற்படுவதோடு நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பேட்டி கொடுக்கும் அளவிற்கு பெரிய நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.

மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, 6-ம் இடத்தில் குரு வருவதால் மீண்டும் பழைய பிரச்சினை தலைதூக்கலாம். நட்பு பகையாகும். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி குறையலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. முக்கியப் பிரமுகர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

ராகு-கேது பெயா்ச்சி காலம் 21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை ஜென்மத்தில் கேதுவும், 7-ம் இடத்திற்கு ராகுவும் வருகிறார்கள். எனவே சர்ப்ப தோஷத்தின் ஆதிக்கத்தில் உங்கள் ராசி அமைகின்றது. ஏற்றமும், இறக்கமும் கலந்த வாழ்க்கையே அமையும். வரவைக் காட்டிலும், செலவு அதிகரிக்கலாம். ஒருதொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை வந்து சேரும். வாய்ப்புகளில் ஒன்று இரண்டு கைநழுவிப் போகலாம். தொழில் கூட்டாளிகளிடம் கொஞ்சம் விழிப்புணா்ச்சியோடு இருப்பது நல்லது. பயணங்களால் இடையூறுகள் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். முறையாக சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்து கொள்வதன் மூலம் முன்னேற்றத்திலுள்ள இடையூறுகள் அகலும்.

ஜென்ம கேதுவால் இடமாற்றம், ஊா்மாற்றம், வீடுமாற்றங்கள் வரலாம். இல்லத்தில் உள்ளவர்களின் அனுசரிப்பு குறையும். தொழில் ரீதியாக நீங்கள் எடுத்த முயற்சி, பொருளாதாரப் பற்றாக்குறையின் காரணமாக பாதியிலேயே நின்று போகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. இன்னல்கள் அனைத்தும் விலக ஒவ்வொரு வாரமும் நவக்கிரகத்தில் உள்ள கேது பகவானை நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் ஓரளவு நன்மை கிடைக்கும்.

சனியின் வக்ர காலம் 12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனிபகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. சுகஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான இவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான பஞ்சாயத்துக்கள் இழுபறி நிலையில் இருக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் மாற்றங்கள் பலவற்றையும் சந்திக்க நேரிடும். விரயங்கள் கூடும். வீண் பிரச்சினைகள் பலவற்றையும் எதிர்கொள்ளும் சூழ்நிலை உண்டு. சனி பகவான் வழிபாடு உங்கள் சஞ்சலங்களைத் தீர்க்கும்.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம் 14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 26.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய் – சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் சகோதர ஒற்றுமை குறையும். வாழ்க்கைத் துணை வழியே பிரச்சினை அதிகரிக்கும் என்பதால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. ஊா் மாற்றங்களும், வீடு மாற்றங்களும் திருப்தி அளிக்காது. பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் ஏற்படும். அரைகுறையாக பல பணிகள் நிற்கலாம். பிறரிடம் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். எதையும் யோசித்துச் செய்வதன் மூலமே காரியங்களில் வெற்றி காண இயலும்.

பெண்களுக்கான பலன்கள் இந்தப் புத்தாண்டு அதிக விரயங்களைச் சந்திக்கும் ஆண்டாக அமைகின்றது. மனக்குழப்பம் அதிகரிக்கும். உறவினர்களின் பகையால் ஒருசில நல்ல காரியங்கள் தடைபடலாம். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளாலும், தொல்லைகள் ஏற்படலாம். பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளின் ஆதரவு, சென்ற ஆண்டைக் காட்டிலும் கொஞ்சம் குறைவாகவே கிடைக்கும். தன்னம்பிக்கையைத் தளர விட வேண்டாம். பணிபுரியும் இடத்தில் பக்கத்தில் இருப்பவர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். சனீஸ்வரர் வழிபாடு சந்தோஷம் வழங்கும்.

வளர்ச்சி தரும் வழிபாடு இந்த ஆண்டு முழுவதும் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவதோடு, மூலம் நட்சத்திரம் வரும் நாளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டால் தடைகள் அகலும். தகுந்த பலன் கிடைக்கும்

RELATED ARTICLES

Most Popular

Recent Comments