இந்த வருட இறுதி வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதன்கிழமை பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைகளை முன்வைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எரிபொருள் இறக்குமதி தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையின் சொந்த ஏற்றுமதி வருமானம் மற்றும் வெளிநாட்டுப் பணம் மூலம் அவ்வாறு இறக்குமதி செய்வதற்கான முறைமையை ஆரம்பிக்க வேண்டியது அவசியமானது என்றார்.
- Advertisement -
தற்போது, நம் முன் உள்ள உடனடித் தேவை எரிபொருள். எரிபொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் சர்வதேச உதவியைப் பாராட்டுகின்ற அதேவேளையில், எமது சொந்த ஏற்றுமதி வருமானம் மற்றும் வெளிநாட்டுப் பணம் மூலம் அவ்வாறு இறக்குமதி செய்வதற்கான முறைமையை நாம் இப்போது ஆரம்பிக்க வேண்டிய தருணம் இது.
எரிபொருளுக்கான கொடுப்பனவுகளைச் சமநிலைப்படுத்துவதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட இறக்குமதிகளையும் நாம் கட்டுப்படுத்த வேண்டும். மறுபுறம், எரிபொருள் விநியோகம் குறைக்கப்பட வேண்டும். இந்த கஷ்டங்களை இந்த ஆண்டு இறுதி வரை தாங்கிக் கொள்ள வேண்டும்,என்றார்.
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். நீண்ட கால பொருளாதார கொள்கைகளின் ஊடாக இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.