‘ராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது’ என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்மது என்கிற பத்திரிக்கையாளர் எழுதி இருக்கிறார். அந்த நூலின் பெயர: Assassination of Rajiv Gandhi: An Inside Job?’
- Advertisement -
ஃபராஸ் அஹ்மது என்பவர் சாதாரண ஒரு எழுத்தாளர் அல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ், தி பயனியர், டெக்கான் கிரானிக்கில், தி ஆசியன் ஏஜ் மற்றும் ட்ரிபியூன் போன்ற முன்னணி ஊடகங்களில் அரசியல் மற்றும் புலனாய்வு பிரிவுகளில் பணியாற்றியவர்.
- Advertisement -
இதுவரை ராஜீவ் காந்தி கொலை குறித்து வந்த நூல்கள் யாவும் ஒன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு குறித்தோ, அல்லது SIT கார்த்திகேயன், ரகோத்தமன் போன்றவர்கள் தங்களின் புலனாய்வு குறித்தோ எழுதப்பட்டவை . ஆனால், இந்த நூல்தான் முதன்முறையாக புலனாய்வு, குற்றச்சாட்டப்பட்டவர்களின் வாதம் தாண்டி, அனைத்திற்கும் மேலாக அதன் பின்னே இருக்கும் ‘அரசியல்’ குறித்து தெளிவாக விவரிக்கிறது.
இந்த நூலில் அவர் ‘இப்படி’ துவங்கி ‘இப்படியே’ முடிக்கிறார். அதாவது, எந்த ஒரு காவல் அமைப்பும், புலனாய்வு நிறுவனமும் அதிமுக்கிய கொலைகளை விசாரிக்கும் போது, கொலைக்கு பின்னே இருக்கும் கொலையாளிகளின் நோக்கம், கொலை செய்ய ஏற்படும் தூண்டுணர்வு (motivation), கொலையால் கிடைக்ககூடிய ஆதாயம்.. இவற்றை ஆராயாமல் எந்த ஒரு குற்ற விசாரணையையும் நிகழ்த்த முடியாது, துப்பு துலக்குவதில் வெற்றியும் கிட்டாது என்கிறார். ராஜீவின் கொலையை அந்த நோக்கில் ஆராயும்போது… ஆதாயமடைந்தவர்கள் யாராக இருக்கிறார்கள் என்பதை ராஜீவுக்கு பிந்தைய கடந்த இரு தசாபத்ங்களின் அரசியல் போக்கில் பார்க்க முடிகிறது.
ராஜீவ் இறக்கும் முன்னர் பாராளுமன்றத்திற்கு உள்ளேயே நுழைய முடியாமல் இருந்த ஒரு கும்பல் இன்று பாராளுமன்ற அரசியலை மட்டுமின்றி, அரச நிறுவனங்கள் அனைத்தையும் ஆட்சி செய்கிறது. கொலையோடு நேரடியாக சம்பந்தப்பட்ட அல்லது ஜெயின் மற்றும் வர்மா கமிஷனால் சந்தேக நிழல் படிந்த.. நரசிம்மராவ் துவங்கி சந்திராசாமி, சுப்பிரமணிய சாமி, டி என் சேஷன், நாராயணன், மார்கரெட் ஆல்வா, மரகதம் சந்திரசேகர் உள்ளிட்ட தலைவர்களும்.. விசாரணையை திட்டமிட்டு குழப்பி, திசை திருப்பிய அதிகாரிகள் எண்ணற்றோர் தங்கள் புரொஃபஷனில் உச்சத்திற்கு செல்கிறார்கள்.
குறிப்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு (SIT) கார்த்திகேயன், ராகவன் பிற்காலத்தில் சிபிஐ தலைவராகிறார். இவர்தான் பின்னர் குஜராத் படுகொலைகளில் மோடிக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டிற்கு அறிக்கை அளித்தவர். அந்த ராகவன் தற்போது சைப்ரசுக்கான இந்தியாவின் ஹை கமிஷனர்.