எதிர்வரும் செப்டம்பர் மாத நிறைவிற்கு முன்னர் நாட்டு மக்களில் 30 வயதுக்கும் மேற்பட்ட 13 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
- Advertisement -
மேலும் தற்போது நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றி வரும் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அத்தோடு கடந்தகால தவறுகளை திருத்திக்கொண்டு முன்நோக்கிப் பயணிப்பதாக குறிப்பிட்ட அவர், கடந்த காலத்தில் அச்சறுத்தலுக்கு உள்ளாகிய பௌத்த புராதனச் சின்னங்களை பாதுகாக்க தமது அரசாங்கத்தினால் முடிந்திருப்பதாகவும் பெருமிதம் வெளியிட்டார்.
எமது நாட்டுக்கு மட்டுமன்றி, அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடையாத அனைத்து நாடுகளுக்குமே, இன்று ஒரு பாரிய பிரச்சினையாக கொவிட் 19 தொற்றுப் பரவல் மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள சுமார் 178 மில்லியன் பேர், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3.8 மில்லியன் பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்பக் கட்டத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட அபிவிருத்தியடைந்த நாடுகள், தற்போது அதன் பாதிப்பைப் பெருமளவில் கட்டுப்படுத்தியுள்ளன.
அந்நாடுகளைச் சேர்ந்த மக்களில் பெருமளவானோருக்குத் தடுப்பூசி ஏற்றியதனாலேயே, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சில நாடுகளால் அவற்றை இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை காணப்பட்டாலும், இதுவரையில் எந்தவொரு தடுப்பூசியையும் தமது மக்களுக்காகப் பெற்றுக் கொடுக்க முடியாத நாடுகளும் உள்ளன.
இலங்கைக்குத் தடுப்பூசியைக் கொண்டுவருவது தொடர்பில், கடந்த காலத்தில் நான் விஷேட கவனம் செலுத்தியிருந்தேன். சீனா, இந்தியா போன்ற நாடுகளின் அரச தலைவர்களுடன், தனிப்பட்ட முறையில் உரையாடினேன்.
கடிதத் தொடர்புகள் மூலமும், கோரிக்கை விடுத்திருந்தேன். எமது வெளிநாட்டு அமைச்சின் ஊடாகவும் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஊடாகவும், தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளுடன் கலந்துரையாடினோம். எமது அதிகாரிகள், தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார்கள்.
எமது நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே, இம்முயற்சிகளின் நோக்கமாகும்.
இந்த முயற்சிகளின் பயனாக, ஒவ்வொரு மாதமும் எமக்குத் தேவையான பெருமளவு தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைத்துக்கொண்டிருக்கின்றன. உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம்.
தற்போது வரையில், 12 இலட்சத்து 64, ஆயிரம் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள், 31 இலட்சம் சைனோஃபாம் தடுப்பூசிகள், ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் உள்ளடங்களாக, 44 இலட்சத்து 94 ஆயிரம் தடுப்பூசிகள் எமக்குக் கிடைத்திருக்கின்றன.
தற்போது, நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் மொத்தச் சனத்தொகையில், சுமார் 3 மில்லியன் பேருக்குத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. ஜூலை மாதத்தில், 4 மில்லியன் சைனோஃபாம் தடுப்பூசிகளும் 2.5 இலட்சம் சைனோவெக் தடுப்பூசிகளும் கிடைக்கவுள்ளன.
அதேபோன்று, இரண்டு மில்லியன் ஸ்பூட்னிக் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, ஓகஸ்ட் மாதமளவில் 5 மில்லியன் சைனோஃபாம் தடுப்பூசிகளும் 2.5 மில்லியன் சைனோவெக் தடுப்பூசிகளும், 2 மில்லியன் ஸ்பூட்னிக் தடுப்பூசிகளும் கிடைக்கவுள்ளன. இறுதியாக, செப்டம்பர் மாதத்தில் 3 மில்லியன் சைனோஃபாம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன.
இவ்வருடம் செப்டம்பர் மாதமளவில், 13 இலட்சம் மக்களுக்கான தடுப்பூசிகளை வழங்கக் கூடியதாக இருக்கும். அதன்படி, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இக்காலப்பகுதியில் தடுப்பூசிகளை வழங்கக் கூடியதாக இருக்கும்.
இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய நிலைமையாகும்.
ஸ்ரீலங்கா நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய உரையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, தமிழ் மக்கள் சார்ந்த எந்தவொரு விடயத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.