வடமராட்சி, துன்னாலை மேற்கில் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட பயிற்சியாளர் உட்பட 23 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.
பயிற்சி வழங்கிய பயிற்சியாளர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கையின் பின்னர் சுயதனிமைப்படுத்தப்பட்டார்.
- Advertisement -
துன்னாலை மேற்கில் உள்ள விளையாட்டுக் கழகத்தில் கடந்த சில தினங்களாக கிரிக்கெட் பயிற்சி இடம்பெற்று வந்துள்ளது. சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் அடிப்படையில் பயிற்சியில் ஈடுபட வேண்டாம் என்று அந்தப் பிரிவுக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் அறிவுறுத்தப்பட்டது.
அதனையும் மீறி இன்று காலையிலும் பயிற்சி இடம்பெற்றுள்ளது. அதுதொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகரினால் நெல்லியடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
மைதானத்துக்குச் சென்ற பொலிஸார், பயிற்சியாளரைக் கைது செய்து நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
பயிற்சியாளர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதுடன், அவருடன் பயிற்சியில் கலந்து ஈடுபட்டிருந்த 22 பேரும் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.