வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் புதிய தமிழ்க் கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தென்னிலங்கை நாளேடு ஒன்றில் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை வெளியான நாளேட்டிலேயே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
- Advertisement -
இருப்பினும் இந்த செய்தி உண்மைக்குப் புறம்பானதென விக்னேஸ்வரனின் ஊடகப் பிரிவு ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
- Advertisement -

வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், “தாமரை” சின்னத்தில் கட்சியொன்றை ஆரம்பிக்க வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாரதீய ஜனதா கட்சி தமது கட்சியை இலங்கையில் ஸ்தாபிக்கவுள்ளதாக தெரிவித்த கருத்துக்கு, சி.வி. விக்னேஸ்வரன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே, தாமரை சின்னத்தில் விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த நாளேட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வவுனியாவில் நடந்த தமிழ்த்தேசியக் கட்சிகளின் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் கலந்துகொள்ளாதிருந்தமைக்கும் இதுவே காரணம் எனவும் அந்த நாளேடு சுட்டிக்காட்டியுள்ளது.
திவயின நாளேட்டின் இந்தச் செய்தி தொடர்பாக ஐ.பி.சி.தமிழ் செய்திப் பிரிவு விக்னேஸ்வரனின் ஊடகப் பிரிவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இனவாத நோக்கிலேயே அந்த நாளேடு செய்தி வெளியிட்டிருப்பதாகவும், அந்த செய்தியைப் பிரசுரிப்பதற்கு முன்னர் தம்முடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் விக்கேனஸ்வரனின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.