ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுவெடிப்புகளை நடத்திய பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் தீவிரவாத பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட ஒரு இளம் யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாவனெல்லை – ஹிகுல பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய இளம் யுவதி என தெரியவந்துள்ளது. சிஐடி மற்றும் பயங்கரவாத விசாரணைப்பிரிவு நடத்திய விசாரணையில் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் பெண்களை தீவிரவாத அமைப்புக்கு சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு சில பயிற்சிகளை வழங்கியதாக தெரிய வந்துள்ளது. அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இதுபோன்ற 6 பெண்கள் டிசம்பர் 7 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
- Advertisement -
கைது செய்யப்பட்ட யுவதி பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் குறித்த யுவதியின் மூன்று சகோதரர்களும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.