HomeAstrologyமகரம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை

மகரம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 14.4.2021 முதல் 13.4.2022 வரை

மகரம் (உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)

மகர ராசி நேயர்களே!
பிறக்கும் புத்தாண்டில் உங்கள் ராசிநாதன் சனி, உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. எனவே ஆரோக்கியத் தொல்லைகளால் உற்சாகம் குறையும். மனக்கலக்கங்களும் அதிகரிக்கும். அமைதியான வாழ்க்கைக்கு ஆலய வழிபாடு தேவை. விரயங்களைத் தவிர்க்க எதையும் திட்டமிட்டுச் செய்வது நல்லது. சனி- செவ்வாய் பார்வை காலத்தில் மிகமிக கவனம் தேவை.

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி பகவான், ஜென்மச் சனியாக சஞ்சரிக்கின்றார். அவரோடு இணைந்திருந்த குரு பகவான் ஆண்டு தொடங்குவதற்கு முன்னதாகவே கும்ப ராசிக்குச் சென்று விட்டார். எனவே சனியின் பலம் கொஞ்சம் கூடுகின்றது. அதே நேரத்தில் உங்கள் ராசியை கேது பகவான் 3-ம் பார்வையாக பார்க்கின்றார். எனவே ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து அனுகூலமான தகவல் வருவதில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஆரோக்கியத் தொல்லை ஏற்பட்டு உள்ளத்தில் வாட்டம் ஏற்படும்.

பஞ்சம ஸ்தானத்தில் ராகு இருப்பதால், பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்கள் தாங்களாகவே எடுக்கும் முடிவு உங்களுக்கு மனசங்கடத்தை ஏற்படுத்தும். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வளவு உதவி செய்தாலும், அவர்கள் நன்றி காட்டமாட்டார்கள். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி நீங்கள் எடுக்கும் முடிவுகளில் மாற்றம் ஏற்படும். சொத்துக்களை வாங்கும் பொழுது பத்திரப் பதிவில் கவனம் தேவை. உடன்பிறப்புகள் பாசம் காட்டும் நிலை, முன்பு இருந்த அளவிற்கு இப்பொழுது இருக்காது. பூர்வீக சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் ஆளுக்கொரு பக்கமாகச் செல்வர்.

உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். விரயாதிபதியான குரு, தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது பணம் வந்த மறுநிமிடமே செலவாகிவிடும். வியாபாரத்தில் சரிவு ஏற்பட்டு அதை ஈடுசெய்ய புதிய முயற்சி எடுப்பீர்கள். பொதுவாக வீண் விரயங்கள் ஏற்படாமல் இருக்க சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது. வீட்டு முன்னேற்றம் கருதி எந்தெந்த வழிகளில் எல்லாம் விரயம் செய்யலாம் என்பதை, முன்னதாகவே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு அதை நடைமுறைப் படுத்துங்கள்.

கட்டிய வீட்டை பழுது பார்ப்பது அல்லது புதியதாக வீடு கட்டுவது, வாகனங்கள் வாங்குவது, பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தால் அவர்கள் எதிர்கால நலன் கருதி வங்கிகளில் வைப்பு நிதி வைப்பது, சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். சுக ஸ்தானத்தில் நான்கு கிரகங்களின் சேர்க்கையும், புத -ஆதித்ய யோகம், புத -சுக்ர யோகம், செவ்வாய், சுக்ரன் பரிவர்த்தனை யோகம் இருப்பதால் உத்தியோகத்தில் வரும் பிரச்சினைகளைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டு. பொருளாதார நிலை உயர புதிய வழிபிறக்கும். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமைய, சுயஜாதக ரீதியாக திசாபுத்திக்கேற்ற தெய்வங்களை வழிபடுவது நல்லது.

குருவின் வக்ர இயக்கம்
ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். அதோடு 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். 14.9.2021 முல் 12.10.2021 வரை, மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். இதன் விளைவாக உங்களுக்கு நற்பலன்களே நடைபெறும். பொதுவாக 3, 12-க்கு அதிபதி வக்ரம் பெறும்பொழுது, உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். கடன் சுமை கொஞ்சம் குறையும். இடமாற்றங்கள் இனிமை தரும் விதத்தில் அமையும். தடம் மாறிச் சென்ற நண்பர்கள் தானாக வந்து சேருவர். வழக்குகள் சாதகமாக அமையலாம்.

குருப்பெயா்ச்சி காலம்
ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குருபகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 13.4.2022-ல் மீண்டும் மீன ராசிக்குப் பெயா்ச்சியாகிச் செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. அந்த இடங்கள் புனிதமடைவதால் அதற்குரிய ஆதிபத்யங்கள் வாயிலாக நற்பலன் கிடைக்கும். 6-ம் இடத்தைப் பார்ப்பதால் நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் சிறு தொல்லை வந்தாலும், உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. உத்தியோகத்தில் பணிநிரந்தரம் ஆகாதவர்களுக்கு இப்பொழுது பணி நிரந்தரம் ஆகலாம்.

குருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் ஆயுள் ஸ்தானம் பலப்படுகின்றது. ஆரோக்கியத் தொல்லை அகலும். இழந்த பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். தொழிலில் ஏற்பட்ட குறுக்கீடு அகலும். குடும்பத்தில் கல்யாணம் போன்ற சுப காரியங்கள் சிறப்பாக நடைபெறும். வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வீர்கள். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு நீண்ட தூரத்திற்கு மாறுதல் கிடைக்கலாம்.

மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திற்கு வருகின்றார். 3-க்கு அதிபதி 3-ம் இடத்திற்கு வரும்பொழுது முன்னேற்றங்கள் கூடுதலாக இருக்கும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர்.

ராகு-கேது பெயா்ச்சி காலம்
21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை நான்காமிடத்திற்கு ராகுவும், பத்தாமிடத்திற்கு கேதுவும் வருகிறார்கள். இக்காலத்தில் அா்த்தாஷ்டம ராகுவாக இருப்பதால் ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயின் உடல்நலத்தில் குறைபாடுகள் ஏற்பட்டு அகலும். வாகனங்களால் கவலை உண்டு. ‘சொந்த வீடு வாங்கவில்லையே’ என்று ஏங்கியவர்களுக்கு, இப்பொழுது இடம் வாங்கும் யோகம் அல்லது வீடு வாங்கும் யோகம் வந்து சேரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியலாம். புதிய நண்பர்களை சேர்த்துக் கொள்ளும் பொழுது, ஒருகணம் சிந்திப்பது நல்லது.

10-ம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பதவிகள் இல்லம் தேடி வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசு வேலைக்கு முய்றசி செய்தவர்களுக்கு அது கைகூடும். சம்பள உயர்வு பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அது தானாகவே கிடைக்கும். ஓய்வு பெற்ற பிறகும் கூட ஒரு சிலருக்கு தொடர்ந்து வேலை நீடிக்கலாம்.

சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனி பகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தனாதிபதியாகவும் விளங்கும் சனி வக்ரம் பெறுவது அவ் வளவு நல்லதல்ல. உடல் ஆரோக்கிய சீர்கேடுகள் உருவாகலாம். ஒவ்வாமை நோய்க்கு ஆட்பட நேரிடும். விரயங்கள் கூடுதலாக இருக்கும். வேலை மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். வருமானத் தடைகள் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை குறையும். நாவில் கவனம் செலுத்தினால் நன்மைகள் அதிகம் சந்திக்கலாம்.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய்-சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் துணிவும். தன்னம்பிக்கையும் குறையும். தொல்லை தரும் தகவல்கள் நிறைய வந்து கொண்டேயிருக்கும். சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. வேலை தேடி வெளியூர் சென்றவர்களுக்கு, அது கிடைக்காமல் வாங்கிய சொத்தை விற்க நேரிடும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படாமல் இருக்க வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுங்கள்.

பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டில் குடும்பச் சுமை அதிகரிக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். கணவன் – மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலமே ஒற்றுமையைப் பலப்படுத்திக் கொள்ளலாம். ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் பக்கத்தில் உள்ளவர்களின் பகையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தாய் மற்றம் உடன்பிறப்புகள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வர். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

வளர்ச்சி தரும் வழிபாடு
சனிக்கிழமை தோறும் விரதமிருந்து அனுமனுக்கு அதிர்ஷ்ட எண் ஆதிக்கத்தில் வெற்றிலை மாலை அணிவித்து வருவதோடு, யோகபலம் பெற்ற நாளில் நாமக்கல் விஸ்வரூப ஆஞ்சநேயரை வழிபட்டு வருவது நல்லது. நம்பிக்கைகள் அனைத்தும் நடந்தேறும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments