மேல் மாகாணம் உட்பட நாட்டின் அனைத்து பாடசாலைகளும் சகல வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படுவதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதேவேளை, மேல் மாகாணத்திலுள்ள அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் இன்று கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
- Advertisement -
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தனிமைப்படுத்தல் முடக்கத்திற்குள்ளாக்கப்பட்டுள்ள பிரதேச பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்றுமுதல் திறக்கப்படவுள்ளன.
- Advertisement -
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 5, 11 மற்றும் 13ம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏனைய வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென ஏற்கனவே கல்வியமைச்சு அறிவித்திருந்த நிலையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி கிடைத்துள்ள நிலையில் மேல் மாகாணம் உட்பட நாட்டின் அனைத்து பாடசாலைகளும் சகல வகுப்புகளுக்குமான கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, கொழும்பு மறை மாவட்டத்திலுள்ள அனைத்து கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளில் அனைத்து வகுப்புகளுக்குமான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படமாட்டாதென்று அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதியே அந்தப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமென்றும் கத்தோலிக்க, தனியார் பாடசாலைகளுக்கான பிரதம முகாமையாளர் கெமுனு டயஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க, மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் முழுமையாக ஆரம்பிக்கப்படும் நிலையில் சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்றுவதற்கு அனைத்து பாடசாலைகளும் கவனம் செலுத்தவேண்டும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதுதொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்வர் என அந்தச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு முன்னர் அவர்களது சுகாதார நிலைமை தொடர்பில் பெற்றோர்கள் கவனம் செலுத்தவேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் பாடசாலை மாணவர்கள் போக்குவரத்துச் செய்யும் அனைத்து பாடசாலை பஸ்கள் மற்றும் வான்கள் முறையான சுகாதார வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துவது அவசியம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பில் பொலிஸ் துறையினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான சிசுசெரிய பஸ் சேவைகளை இன்று முதல் முழுமையாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை்கேற்ப சிசுசெரிய பஸ்களை அதிகரிக்க முடியுமென்றும் அதற்குப் பொறுப்பான அதிகாரி நேற்று தெரிவித்தார்.