சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 354 கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த 19 ஆம் திகதி எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட 1100 பி.சி.ஆர். பரிசோதனைகளில் இவ்வாறு 354 பேருக்கு தொற்றுறுதி செய்யட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் ஐவரங்டகிய விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வலுசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் சந்திகா எதுகல தலைமையில் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சின் ஆலோசகர் லலித் வசந்த, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் புத்திக மதிஹேவா, வலிசக்தி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் நயன சேனாரத்ன, பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் வைத்திய அதிகாரி ரோஷிணி ருசிரிவர்தன ஆகியோர் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
- Advertisement -
சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பேணப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்வது இக்குழுவின் பணியாகும் என்று வலு சக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா தெரிவித்துள்ளார். இக்குழுவின் அறிக்கை அடுத்த 10 நாட்களுக்குள் அமைச்சரிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்று திங்கட்கிழமை இரவு 9.30 மணி வரை இரண்டாம் அலையுடன் தொடர்புடைய 274 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 90 474 ஆக அதிகரித்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 87 058 பேர் குணமடைந்துள்ளதோடு, 2771 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.