திருமண உறவில் தாம்பத்திய உறவு என்பது ஒரு கடமை என தீர்ப்பளித்த பிரான்சை, பெண்ணொருவர் ஐரோப்பிய நீதிமன்றத்துக்கு இழுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஆணையகத்தின் மனித உரிமைகள் நீதிமன்றத்தில், பிரான்சுக்கு எதிராக அவரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரெஞ்சுப் பெண் ஒருவர் தொடர்ந்த விவாகரத்து வழக்கு ஒன்றில், அவர் தன் கணவனுடன் தாம்பத்திய உறவு கொள்ள மறுத்ததால் அவருக்கு எதிராக பிரான்ஸ் நீதிமன்றம் விவாகரத்து அளிப்பதாக தீர்ப்பளித்தது. குறித்த பெண் இரண்டு பெண்ணிய அமைப்புகளின் உதவியுடன், ஐரோப்பிய ஆணையகத்தின் மனித உரிமைகள் நீதிமன்றத்தில் பிரான்சுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த பெண்ணிய அமைப்புகள், பிரான்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு மனித உரிமைகள் அரசியல் அமைப்புக்கு எதிரானது என்ற வாதத்தை முன்வைத்துள்ளன. 2019ஆம் ஆண்டு Versaillesஇல் உள்ள மேல் முறையீட்டு நீதிமன்றம், அந்த பெண் தனது கணவருடன் தாம்பத்திய உறவு கொள்ள மறுத்ததால் விவாகரத்துக்கு அனுமதித்தது.
இருவர் பகிர்ந்து வாழும் திருமண வாழ்வில், அந்த மனைவி திருமணத்தின் கட்டாய கடமையான தாம்பத்திய உறவு முதலான கடமைகளை செய்ய தவறிவிட்டதால் விவாகரத்து அளிப்பதாக தீர்ப்பளித்திருந்தது. ஆனால், திருமணம் என்பது தாம்பத்திய உறவு என்னும் சேவையை வழங்கும் ஒரு அமைப்பு அல்ல எனவும், அப்படி இருக்கவும் கூடாது என அவ்விரு பெண்ணிய அமைப்புகளும் வாதிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.