வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் இலங்கை மக்களுக்கான நியாயத்தை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கம் வரையில் தாம் ஓயப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்தார். அதற்காக பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- Advertisement -
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வெளிநாடுகளில் தொழில் புரிந்து வரும் இந்நாட்டு உழைக்கும் மக்களே , நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுத்தவர்கள். அரசாங்கம் தற்போது அதனை மறந்து செயற்பட்டு வருகின்றது.
- Advertisement -

ஆளும்தரப்பு அமைச்சர் ஒருவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் எமது மக்களை வெடிகுண்டு என்றும் தெரிவித்திருந்தார். தேர்தலின் போது வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அரச மரியாதையுடன் இந்த வெளிநாட்டு பணியாளர்களை அழைத்து வந்தனர். ஆனால் தற்போது அவர்கள் தொடர்பில் எந்தவித நடவடிக்கையையும் எடுக்காது உள்ளனர்.
வெளிநாட்டு பணியாளர்கள் இன்று பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள். அவர்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வரையில் நாங்கள் அமைதியாக இருக்கபோவதில்லை. இவ்விடத்தில் நாம் மாபெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்திலேயே நாம் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளோம். தேர்தலை நோக்காக கொண்டு அல்ல என மேலும் தெரிவித்தார்.