வடகிழக்கு தமிழர் தாயகம் என்பதை அங்கீகரிக்கவும் இந்திய இராணுவத்தினை தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் சமாதியில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று பிற்பகல் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தினர் மற்றும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமாதிக்கு ஈகச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
- Advertisement -
வடகிழக்கு தமிழர்களின் தாயகம்,தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள்,இந்திய இராணுவம் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேறவேண்டும் என்பதை வலியுறுத்தி இன்றைய நாளில் அன்னை பூபதி மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதத்தினை ஆரம்பித்தார்.n அகிம்சை ரீதியான போராட்டத்தினை இந்திய அரசாங்கம் கண்டுகொள்ளாத நிலையில் அன்னை பூபதி தனது உயிரினை தியாகம் செய்தார்.
அன்னாரின் உடலம் நாவலடியில் நல்லடக்கம் செய்யப்பட்டு தூபி அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவரது போராட்டத்தின் தியாகத்தினை நினைவுகூரும் வகையில் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வேலன் சுவாமி,கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இன்றைய தினம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிவேண்டி நடாத்தப்பட்ட போராட்டத்தினை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அன்னை பூபதியின் சமாதிக்கு வருகைதந்து அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.