கடந்த ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ஜோ பைடனை தோற்கடிக்க ரஷ்ய அதிபர் புடின் முயற்சி செய்ததாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு தேர்தலுக்கான வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் குறித்து தேசிய புலனாய்வு இயக்குனர் அலுவலகம் விசாரணை நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.
ஜோ பைடன் மீது தவறான, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் ஆதரவாளர்கள் மூலம் பரப்ப புடினும், அவரது நிர்வாகமும் முயற்சித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் நிறுவனத்துடன் வர்த்தக உறவு வைத்துள்ள ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடன் மீதான நிரூபிக்கப்படாத மோசடி வழக்கில் ஜோ பைடனையும் சேர்க்க ரஷ்ய அரசின் உதவியுடன் ட்ரம்ப் ஆதரவாளர்கள் சதித் திட்டம் தீட்டியதாக அந்த அறிக்கை கூறுகிறது.
- Advertisement -
அதேபோல் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபர் ஆவதை தடுக்கும் நோக்கில் ஈரான், அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட முயற்சித்ததாகவும் உளவுத் துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் இத்தகைய அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் எந்த ஒரு வெளிநாட்டு சக்தியும் தலையிட்டதற்கான அறிகுறிகள் இல்லை என உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே அதிபர் தேர்தல் விவகாரத்தில் தங்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என ரஷ்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.