இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொவிட்19 தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நாக்பூர், மும்பை போன்ற நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்திலும் தொடர்ந்து தொற்று பரவல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 836 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 இலட்சத்து 60 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,051 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பெப்ரவரி மாத இறுதியில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 480 என்ற எண்ணிக்கையில் இருந்து வந்த நிலையில், தற்போது தொற்று எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதேபோல, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 15,051 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சியில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு ஆலோசனை நடத்துவார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், முக்கிய நகரங்களில் விதிமுறைகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்துதல் குறித்து அவர் ஆலோசிக்க உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து விட்டாலும் சில நகரங்களில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியாதிருக்கின்றது. குஜராத் மாநில அரசு தலைநகர் அஹமதாபாத் மற்றும் வதோதரா, சூரத், ராஜ்கோட் ஆகிய நகரங்களுக்கு நேற்று (மார்ச் 17) முதல் இம்மாத இறுதி வரை இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்துவதாக அறிவித்துள்ளது.
அதன்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வணிக நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்கள், மால்கள் இயங்காது. மருந்துக் கடைகள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.