புர்காவை தடை செய்வதற்கான உத்தரவு நேற்றைய தினம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அதற்கிணங்க முகத்தை முழுமையாக மூடும் வகையிலான பெண்கள் அணியும் ஆடைகள் இதன் மூலம் தடை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தலை கவனத்திற் கொண்டே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
கடந்த சில தினங்களுக்கு முன்பு அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தில் தாம் கையொப்பமிட்டதாக தெரிவித்துள்ள அவர், புர்கா அணியும் நடைமுறை அண்மைக்காலத்தில் மத அடிப்படைவாதிகளால் ஒரு சம்பிரதாயமாக கொண்டுவரப் பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார். அதேவேளை நாட்டில் பதிவு செய்யப்படாத ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்ரஸாக்கள் காணப்படுவதாகவும் அது தொடர்பில் எந்த கண்காணிப்புகளும் இல்லாத நிலையில் எதிர்காலத்தில் அவற்றை மூடி விடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -

அதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடும் அடிப்படைவாத மதவாத கருத்துக்களை இல்லாதொழிப்பதற்கான உத்தரவை அரசாங்கம் விசேட வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்தகைய குற்றத்திற்காக கைது செய்யப்படுபவர்கள் புனர்வாழ்வளிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.