பாகிஸ்தான் பிரதமரை சந்திக்க முஸ்லிம் தரப்புக்குத் தடை! திடீர் அறிப்பு

ஸ்ரீலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ஸ்ரீலங்காவிலுள்ள முஸ்லிம் தலைவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தினால் இதுதொடர்பிலான அறிவிப்பு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஸ்ரீலங்காவுக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச , பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் மாத்திரமே சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் ஆகியோருடனான சந்திப்புக்கும் சிறிது நேரம் ஒதுக்கீடு செய்யப்ட்டிருந்தது. எனினும் இறுதி நேரத்தில் இந்த சந்திப்புக்களுக்கான சந்தர்ப்பம் இரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரை அண்மையில் சந்தித்து, ஸ்ரீலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் கலந்துரையாடியிருந்தார். இதன்போது பாகிஸ்தான் பிரதமரை சந்திப்பதற்கு நேரம் கோரியிருந்தனர். இதன்படி குறுகிய நேரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த சந்திப்பு நடைபெறாது என பாகிஸ்தான் தூதுவரால், மேற்படி இரு தலைவர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. சந்திப்பு இரத்தானதற்கான காரணம் வெளியாகாதபோதிலும், அரச உயர்மட்டத்திலிருந்து விடுக்கப்பட்ட அழுத்தத்தால் அவ்வாறு நடந்திருக்ககூடும் என தாருஸலாம் தகவல்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *