தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று மாலை மையம் கொண்டிருந்ததாக இலங்கையின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தகவலின்படி, வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘அசானி’ புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், மத்திய கிழக்கு வங்கக்கடலில், தீவிர புயலாக வலுவடையும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது
இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த சில மணிநேரங்களில் தென்கிழக்கு வங்கக்கடலில் புயலாக வலுவடைந்து, இன்று கிழக்கு-மத்திய வங்கக்கடலில் தீவிர சூறாவளியாக மாற வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக குறித்த கடற்பரப்புகளில் மிக அதிக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், மணிக்கு 70-80 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் மறு அறிவித்தல் வரை கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால கணிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
குறித்த கடல் பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக கரையோரங்களுக்குத் திரும்பவும் அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதேவேளை நிலப்பகுதிகளில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் காலை நேரத்திலும் சில மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்று இலங்கையின் வானிலை மையம் அறிவித்துள்ளது