வீதியில் கைவிடப்பட்டிருந்த ஐந்து வயது சிறுவன் ஒருவனை எம்பிலிபிட்டிய – குட்டிகல காவல்துறையினர் மீட்டுள்ளனர். குறித்த சிறுவனிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின்போது, குட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த, குறித்த சிறுவனை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று அவரது தாய் மற்றும் மாற்றாந்தந்தை ஆகியோர் நெடுஞ்சாலையில் விட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் தாய் அந்த சிறுவனை அடித்து காயப்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சிகிச்சைக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், சட்ட வைத்தியரிடமும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுவனின் தாய், தனது கணவனை விட்டு பிரிந்து மறுமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவனை வீதியில் கைவிட்டு செல்லும் போது தாய் சென்ற முச்சக்கர வண்டியின் பின்னால் சிறுவன் அழுதவாறு ஓடியதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

சிறுவனின் பெற்றோர் இதற்கு முன்னர் போகல்ஹார பிரதேசத்தில் வசித்து வந்துள்ளதுடன் இரண்டாவது திருமணத்தின் பின்னர், தாய் தனது இரண்டாவது கணவருடன் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு பின்னால் உள்ள வீட்டில் குடியேறியுள்ளார்.
அந்த வீட்டில் இரண்டாவது கணவனின் தாயும் இளைய சகோதரும் வசித்து வருகின்றனர். சிறுவனின் தாயும் சித்தப்பாவும் பிரதேசத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக வீட்டில் உள்ளவர்கள் கூறியுள்ளனர்.
சிறுவன் இதுவரை முன்பள்ளியில் சேர்க்கப்படவில்லை. சிறுவன் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பெண்ணும் சிறுவனின் தாயாரது உறவினர் எனக்கூறப்படுகிறது.

சிறுவனின் நெற்றிலும் முதுகிலும் காயங்கள் காணப்படுவதாக கூறியுள்ள பொலிஸார், தாயை கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் இரண்டாவது கணவர், எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு எதிரில் முச்சக்கர வண்டியை ஓட்டி வருவபவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
குட்டிகல பொலிஸார் சிறுவனை அவரது பாட்டியின் பொறுப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிறுவனை சிகிச்சைகளின் பின்னர் நீதிமன்றத்தின் ஊடாக சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்