அமெரிக்காவைச் சேர்ந்த Johnson & Johnson என்ற மருந்தாக்க நிறுவனம் அனைவராலும் பயன்படுத்தப்படும் பவுடர் மற்றும் கிறீம் போன்ற பொருட்களை தயாரித்து வருகின்றது.
இந்நிலையில், Asbestos என்னும் தாதுப்பொருட்கள் உள்ளடங்கிய அந்த பவுடர் வகைகளால் புற்றுநோய் ஏற்பட்டதாக அதன் பயனாளர்கள் வழக்கு பதிவு செய்திருந்துள்ளனர்.
நிறுவனத்தின் பேபி பவுடர் மற்றும் பிற டால்க் பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கியது என்ற குற்றச்சாட்டை தீர்க்க அடுத்த 25 ஆண்டுகளில் 8.9 பில்லியன் டொலரினை வழங்க Johnson & Johnson மருந்தாக்க நிறுவனம் முன்வந்துள்ளது.
நீண்ட ஆண்டுகளாக நடந்து வரும் அந்த வழக்குகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அந்தத் தொகையை நிறுவனம் முன்மொழிந்துள்ளது. ஆயினும் அதற்கு நொடிப்பு நீதிமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Asbestos தாதுப்பொருள் கலக்கப்பட்ட Johnson & Johnson டால்க் பவுடரைப் பயன்படுத்தியவர்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் பல்லாயிர கணக்கான வழக்குகளை நிறுவனம் எதிர்நோக்கி வந்துள்ளது.
ஆனால் அவற்றுக்குப் போதிய அறிவியல் ஆதாரம் இல்லை என்று நிறுவன வழக்காடலின் துணைத் தலைவர் எரிக் ஹாஸ் குறிப்பிட்டுள்ளதுடன், குறித்த நிறுவனம் எந்தத் தவறினையும் ஒப்புக் கொள்ளவில்லை.
இருப்பினும், குழந்தைகளுக்கான டால்க் பவுடரின் விற்பனையை 2020 ஆம் ஆண்டு மே மாதமளவில் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது