பூண்டுலோயா அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக திருவிழாவில் அடியவர்களிடம் நகைகளைத் கொள்ளையிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கும்பாபிஷேக திருவிழாவில் இந்த திருட்டு இடம்பெற்றது. இந்நிலையில் திருட்டுச்சம்பவம் தொடர்பில் 7 பெண்கள் உட்பட 2 ஆண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் .
பொலிஸில் முறைப்பாடு
கைது செய்யப்பட்டவர்கள் பல்லெகலை , வவுனியா, புத்தளம், யாழ்ப்பாணம் , கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்களென விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கும்பாபிஷேக திருவிழாவில் நகைகளைப் பறிகொடுத்தவர்கள் பூண்டுலோயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் .
அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சிறுமி ஒருவரிடம் தங்கச் சங்கிலியை அச்சுறுத்தி அபகரிக்க் முற்பட்ட போது பொது மக்களும் , பொலிஸாரும் இணைந்து திருடர்களை மடக்கி பிடித்துள்ளனர்.
தொடர்ந்து இவர்களில் ஏழு பேர் தப்பிச்செல்ல முற்பட்ட போது கொத்மலை பொலிஸாரின் உதவியுடன் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வேனில் பயணித்த நிலையில் கைது செய்யப்பட்டனர் .
அதோடு ஆலயத்தில் அபகரிக்கப்பட்ட 17 பவுண் 3 மஞ்சரி நகையும் , இவர்கள் அனைவரிடமும் சோதனை செய்த போது 100 பவுணுக்கும் மேற்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டதாக பூண்டுலோயா பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலும் கைது செய்த ஒன்பது பேரையும் நீதிமன்றில் முற்படுத்தி அடையாள அணிவகுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாகவும் , அவர்கள் தொடர்பில் பல இடங்களில் வழக்குகள் காணப்படுவதாகவும் பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.