ரம்புக்கன, ஹுரிமலுவ பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீடொன்றின் பின்னால் கொன்று புதைக்கப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கொலைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நவம்பர் 19 மற்றும் 28 ஆம் திகதிகளில் மாவனெல்லை கிரிங்கதெனிய மற்றும் கெரமினியா வத்த பகுதியைச் சேர்ந்த மொஹமட் இக்பால் மொஹமட் அஸ்ஹர் மற்றும் மொஹமட் அன்வர் மொஹமட் அர்ஷாத் ஆகிய இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக மாவனெல்லை காவல்துறைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதன்படி, கேகாலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ரம்புக்கனை, ஹுரிமலுவ பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டுக்குப் பின்னால் இரண்டு இளைஞர்களும் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் கேகாலை நீதவான் நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நேற்று கேகாலை நீதவான் வாசனா நவரத்னவின் மேற்பார்வையில் கேகாலை பொது வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர்கள் முன்னிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி நேற்று (12ம் திகதி) மாலை 5.30 மணியளவில் குறித்த வீட்டின் சீமெந்து பலகைக்கு அடியில் உள்ள குழிக்குள் சடலம் ஒன்று புதைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் முதலில் கண்டெடுத்துள்ளனர்.

காணாமல் போன மற்றைய இளைஞரின் சடலத்தைக் கண்டறிவதற்கான அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று பிற்பகல் மற்றைய சடலமும் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்