HomeNewsLocal Newsமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் டிசம்பர் மாத ராசி பலன்கள்- 2022

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் டிசம்பர் மாத ராசி பலன்கள்- 2022

மேஷம்:
உங்களுக்கு யோகம் தருபவரான குரு பன்னிரண்டாம் இடத்தில் அமர்ந்திருப்பதும், ராசிநாதன் செவ்வாய் சுபர் வீடான இரண்டில் இருப்பதும் இந்த மாதம் நல்ல பண வரவும் அதற்கேற்ற செலவுகளும் மேஷ ராசிக்காரர்களுக்கு இருக்கும் என்பதை காட்டுகிறது. பாக்கிய வீடான ஒன்பதில் சுக்கிரனும், புதனும் இருப்பதால் இதுவரை என்ன கிடைக்கவில்லை என்று நினைத்திருந்தீர்களோ அவை கிடைக்கும் மாதம் இது. இளைஞர்களுக்கு உற்சாகம் இருக்கும். கேட்டது கிடைக்கும். வேலை, தொழிலில் சங்கடங்கள் இருக்காது. காதல் நிறைவேறும்.

ராசிநாதன் இரண்டாம் வீட்டில் இருப்பதால் இது உங்களுக்கு அதிர்ஷ்டமுள்ள மாதம்தான். குறிப்பாக இந்த மாதத்தை உங்களின் கடன்களும், நோய்களும் தீரும் மாதம் என்று சொல்லுவேன். பனிரெண்டில் குரு இருப்பது கடனையும், நோயையும் விலக்கி வைக்கும் அமைப்பு என்பதால் கடன்களை நினைத்து கலக்கத்தில் இருப்பவர்களுக்கு சந்தோஷம் தரும் மாதம் இது. சிலருக்கு வெகுநாள் இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் முடிவடைந்து பணவரவு உண்டு. குலதெய்வ வழிபாட்டை தள்ளிப் போட்டு வந்தவர்கள் உடனடியாக அதைச் செய்வது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் குலதெய்வமே நம்மைக் காப்பாற்றும்.

சகோதர உறவு நன்றாக இருக்கும். கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடுகள் நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழல்கள் இருக்கும். தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். சிலருக்கு வெளிமாநில அல்லது வெளிநாட்டு பயணங்களும், இட மாறுதல்களும் இருக்கும். சிலருக்கு அப்பாவால் செலவுகள் இருக்கும். வயது முதிர்ந்த ஆரோக்கியக் குறைவுள்ள தகப்பனாரைக் கொண்டவர்கள் அவரின் மேல் அக்கறையுடன் இருக்கவும். வேலை செய்யுமிடத்திலும் நல்ல பெயர் வாங்குவீர்கள்.

தாயார் வழி நன்மைகள் உண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட இனங்கள், சிற்றுண்டி விடுதி, லாட்ஜிங், வாகனங்கள், வாடகை, கலைத்துறை, டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானம் வரும்.
2,4,5,8,9,10,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 21 -ம்தேதி அதிகாலை 2.57 முதல் 23-ம் தேதி அதிகாலை 4.02 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. சந்திரன் எட்டில் இருக்கும் நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் இந்த நாட்களில் எவரிடமும் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்:
டிசம்பர் மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன், எட்டில் மறைந்தாலும் ஆட்சி நிலையில் இருப்பதும், இயற்கை சுபரான குரு, லாபத்தில் உள்ளதும் ரிஷபத்திற்கு யோகம் தரும் அமைப்பு. ராசிநாதனோடு தனாதிபதி புதனும் எட்டில் இருப்பதால் இந்த மாதம் உங்களில் சிலருக்கு மறைமுகமான வழியில் எதிர்பாராத பணவரவு இருக்கும். சாதகமான கிரக அமைப்புகள் உங்களுக்கு மன நிறைவைக் கொடுக்கும் என்பதால் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் அடுத்த வருடம் கிடைக்க இருக்கும் நன்மைகளுக்கு அச்சாரம் போடுகின்ற மாதமாக இருக்கும்.

எட்டாமிடம் சுபத்துவ வலுவை அடைவதால் வெளிநாடு வெளிமாநிலம் போன்ற தூர இடங்களுக்கு கல்வி கற்க மற்றும் வேலை செய்ய விருப்பம் கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு இப்போது வீட்டிலோ அலுவலகத்திலோ அனுமதி கிடைக்கும். தாய்நாட்டை விட்டு வெளியே இருக்கின்றவர்களுக்கு இருக்கும் இடத்திலேயே வேலை தொழில் போன்றவைகள் நல்ல நிலையில் இருக்கும். இளைய பருவத்தினருக்கு வாழ்க்கை எவ்விதம் செல்லும் என்பதற்கான அடையாளங்கள் தெரியும். மனதில் உற்சாகமும், எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும். உங்களின் அனைத்துக் கஷ்டங்களும் நீங்குவதற்கான ஆரம்பங்கள் இந்த மாதம் உண்டு. பிரச்னைகள் இனி இருக்காது.

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை இருக்கும். வேலை விஷயமாக பிரிந்து இருக்கும் தம்பதிகள் ஒன்று சேர முடியும். வழக்குகளுக்கு நல்லவித முடிவு இருக்கும். சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதம் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மணவாழ்வில் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு அது தீரும். சிலருக்கு வேலை மாற்றம் நடந்து வெளியூரில் வேலை அமையும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும்.

தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு இது மிகுந்த லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும். எல்லாவிதமான வியாபாரமும் இப்போது கை கொடுக்கும்.
4,5,6,13,14,15,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 23-ம் தேதி அதிகாலை 4.02 முதல் 25-ம் தேதி அதிகாலை 3.31 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள் என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்:
மிதுனத்திற்கு தொட்டது துலங்கும் மாதம் இது. தொட்டது துலங்கும் என்கின்ற வார்த்தையினை வெகுகாலமாக நான் மிதுன ராசிக்கு எழுதவில்லை என்பதை இங்கே நினைவு படுத்துகிறேன். யோகாதிபதி சுக்கிரனும் ராசிநாதன் புதனும் இந்த மாதம் முழுவதும் ஏழாம் இடத்தில் இருந்து ராசியை பார்க்கும் நிலையில் உள்ளதால் உங்களின் முன்னேற்றங்கள் ஆரம்பிக்க இருக்கும் மாதம் இது. இதுவரை நடந்த எதிர்மறை பலன்கள் யாவும் விலகிக் கொண்டிருப்பதை இனி நீங்கள் உணர முடியும். இனிமேல் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும். உங்களில் சிலருக்கு சுப காரியங்கள் நடைபெற முன்னேற்பாடுகள் உண்டு. சிலர் திருமணம் நடக்கப் பெறுவீர்கள். அல்லது வாழ்க்கைத் துணையை அடையாளம் காணும் நிகழ்ச்சியாவது இந்தமாதம் இருக்கும்.

பத்தாம் இடத்தில் வலுவாக உள்ள குரு இரண்டு மற்றும் ஆறாம் இடங்களைப் பார்ப்பது தொழில் வேலை, வியாபாரம் போன்றவைகளுக்கு நல்ல பலனை அளிக்கும். பேசிப் பிழைக்கும் தொழில் அமைப்புகளில் உள்ள மிதுன ராசிக்காரர்கள் அனைவரும் இந்த மாதம் நல்ல பலன்களை அடைவீர்கள். குறிப்பாக தொலைபேசியில் பேசி வாடிக்கையாளர்களை கவரக்கூடிய நிலையில் உள்ள இளைய பருவத்தினருக்கு மாதம் முழுவதும் வருமானமும், டார்கெட் முடிப்பதும் இருக்கும் ஆசிரியர்கள் வழக்கறிஞர்கள் மார்க்கெட்டிங் துறையினருக்கு இனிமேல் நிம்மதி உண்டு ஐந்தில் கேது உள்ளதால் உங்களில் சிலர் ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் செய்வீர்கள்.

புனிதத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதுவரை குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தாதவர்கள் இந்தமாதம் அவற்றை முடிப்பீர்கள்.
இதுவரை உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி இருந்த அனைத்து விஷயங்களும் முடிவுக்கு வரத் துவங்கும். இளைய பருவ மிதுன ராசிக்காரர்கள் அஷ்டமச் சனியால் கடுமையான கஷ்டங்களை அனுபவித்து விட்டீர்கள்.

இனி நீங்கள் கலங்கத் தேவையில்லை. சிறிது நல்லவை நடப்பது போல தோன்றியவுடன் உடனே அகலக்கால் வைக்க வேண்டாம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். 2023-ம் வருடம் உங்கள் வருடமாக இருக்கும். எதிலும் ஜெயிப்பீர்கள். கவலை வேண்டாம்.

1,2,3,10,11,12,20,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 25-ம் தேதி அதிகாலை 3.31 முதல் 27-ம் தேதி அதிகாலை 3.30 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எந்த ஒரு ஆரம்பங்களையும் செய்ய வேண்டாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி கொள்வது போன்ற விஷயங்களை இந்த நாட்களில் தள்ளி வைக்கவும்.

கடகம்:
ஒன்பதாம் இடத்தில் இருந்து ராசியை பார்க்கும் குருவும், லாப ஸ்தானத்தில் உள்ள ராஜ யோகாதிபதி செவ்வாயும் இந்த மாதம் முழுவதும் கடக ராசிக்காரர்களை காப்பாற்றும் நிலையில் இருப்பதால் பெரிய பிரச்சனை இல்லாத மாதமாக டிசம்பர் இருக்கும். வேலையைக் குறிக்கும் ஆறாம் இடத்தில் சுக்கிரனும் புதனும் நல்ல நிலையில் உள்ளதால் கடக்த்தினரின் வேலை தொழில் வியாபார அமைப்புகளில் பின்னடைவுகள் எதுவும் இருக்காது. நல்ல வருமானம் இருக்கும். குடும்பத்தில் அமைதி உண்டு. கணவன் மனைவி புரிந்துணர்வுடன் செயல்படுவீர்கள். குழந்தைகளால் தொல்லை எதுவும் இல்லை. கடன், நோய் போன்றவைகளும் கட்டுக்குள் இருக்கும். பொதுவில் நல்ல மாதம் தான் இது.

உங்களில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்த இளைஞர்களுக்கு இது வாழ்க்கையை சொல்லிக் கொடுக்கும் காலம் என்பதால் அடுத்த மாதம் முதல் எதிலும் அகலக்கால் வைக்காமலும் அவசரப்படாமலும் இருப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். முதுகுக்குப் பின்னால் குழி பறிக்கும் வேலைகள் நடக்கும் என்பதால் எதிலும் உஷாராக இருங்கள். முறைகேடான பணம் வரும் நிலையில் அதிக கவனம் தேவைப்படும். பழகிய ஒருவர் எதிரியாக மாறுவார்.

வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். முதலீடு செய்து தொழில் எதுவும் ஆரம்பிக்க வேண்டாம். கடன் வாங்கவே வாங்காதீர்கள். ஆனாலும் கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தர முடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.
ஆயிலியம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கேது சுபத்துவமாக இருப்பதால் வேற்றுமத, மொழி, இனக்காரர்கள் தொடர்புகள் கிடைக்கும். முகம் தெரியாதவர்கள் உதவுவார்கள்.

வெளிநாட்டில் இருந்து நன்மைகள் உண்டு. இரும்பை கையில் கொண்டு தொழில் செய்யும் டெயிலர்கள், மெக்கானிக்குகள் ஆலைத் தொழிலாளிகள் போன்றவர்களுக்கு நன்மைகள் இருக்கும். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். கெடுதல்கள் எதுவும் இல்லாத மாதம் இது.

1,2,3,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 27-ம் தேதி அதிகாலை 3.30 முதல் 29-ம் தேதி அதிகாலை 5.55 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் முக்கியமான எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதமோ, சண்டை சச்சரவோ செய்ய வேண்டாம்.

சிம்மம்:
மாதம் முழுவதும் ராசிநாதன் சூரியனும், யோகாதிபதி செவ்வாயும் அதிர்ஷ்ட அமைப்புகளில் வலுவான நிலையில் இருப்பதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் யோகம் தருவதாகவே அமையும். குறிப்பாக மாதம் முழுவதும் ஐந்தில் புதன், சுக்கிரன் இணைவும், கேது மூன்றாம் இடத்தில் சுபத்துவமாக இருப்பதும் நன்மைகளைத் தரும். சிலருக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து லாபமும், வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் விருப்பத்திற்கேற்ப சம்பவங்கள் நடப்பதும் இருக்கும்.

ஐந்தாமிடத்தில் இணைந்து லாப ஸ்தானத்தை பார்க்கும் சுக்கிரனும், புதனும் பின்னடைவுகளை தடுத்து நிறுத்தி வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்களை தரும் என்பதால் டிசம்பர் மாதம் சிம்மத்திற்கு தொழில் விஷயங்களில் நல்லவைகளை தரும் மாதமாக இருக்கும். கடன் தொல்லைகளையும், வருமானக் குறைவையும், தொழில் சிக்கல்களையும் சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அது நிவர்த்திக்கப் படும். இளைஞர்களின் மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும், பணவரவும், உங்களால் வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் உறுதியாகும். நீண்ட நாட்களாக புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு கருவுறுதல் இருக்கும்.

வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ஓரளவாவது படிப்பில் அக்கறை இருக்கும். கலைஞர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். நீண்டநாளாக தரிசிக்க நினைத்திருந்த புனிதத்தலங்களை இப்போது தரிசிக்க முடியும். மகான்களின் ஆசி கிடைக்கும். சித்தர்கள் அடங்கிய ஜீவசமாதிக்கு சென்று வர முடியும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

5,6,7,11,12,13,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 1-ம் தேதி இரவு 11.45 மணி முதல் 4-ம் தேதி காலை 6.16 வரையும், மாத பிற்பகுதியில் 29-ம் தேதி காலை 5.55 முதல் 31-ம் தேதி காலை 11.47 வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். இந்த தினங்களில் அறிமுகமாகும் ஒருவரின் மூலம் பின்நாட்களில் சிக்கல்கள் வரும் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது.

கன்னி:
கன்னிக்கு யோக மாதமிது. ஏழாம் இடத்திலிருந்து குரு ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதேபோல ஆட்சி பெற்ற குருவின் வீட்டில் ராசிநாதன் புதனும், சுக்கிரனும் இணைந்திருக்கிறார்கள். மாதம் முழுவதும் ராசிநாதன் புதன் சுக்கிரனின் இணைவில், குருவின் வீட்டில் இருப்பதால் அனைத்தும் நல்லபடியாக நிறைவேறக்கூடிய மாதமாக டிசம்பர் அமையும். சென்ற காலங்களில் எந்த விஷயத்தில் உங்களுக்கு வருத்தம் இருந்ததோ அது இப்பொழுது தீரும். கன்னி ராசிக்காரர்களின் வயதிற்கு ஏற்ற வகையில் வேலை, தொழில், சொந்த வாழ்க்கை போன்றவைகளில் சிக்கல்கள் தீரும். நல்ல மாற்றங்கள் இப்போது உண்டு.
அடுத்த வருடம் முதல் கன்னிக்கு நல்ல அமைப்புகள் ஆரம்பிக்க இருப்பதால் இந்த மாதத்திலிருந்து சிலருக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். உங்களில் சிலருக்கு யாருடன் எந்த திசையில் பயணிப்பது போன்ற தெளிவுகள் இருக்கும். எதை லட்சியமாக கொண்டிருக்கிறீர்களோ அதை நோக்கி பயணிப்பீர்கள். கல்வி வேலை போன்றவைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களில் சிலருக்கு இந்த மாதம் புதிய அறிமுகங்கள் இருக்கும். சிலர் காதலிக்க ஆரம்பிப்பீர்கள். ஏற்கனவே உள்ள காதல் சிலருக்கு திருமணம் வரை செல்லும்.

மாதம் முழுவதும் எட்டுக்குடையவனான செவ்வாய் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். சிலருக்கு தந்தையால் மருத்துவச் செலவுகள் இருக்கும். தந்தையால் விரையம், தந்தையே விரையம் என்ற கிரகநிலை உள்ளது. கவனம். புனித யாத்திரை செல்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிநாடு சம்மந்தப்பட்ட வியாபாரம் செய்பவர்கள் லாபம் கிடைக்கப் பெறுவார்கள். வயதானவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும்.
3,6,8,11,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ம் தேதி காலை 6.16 முதல் 6-ம் தேதி மதியம் 3.03 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் மேற்கண்ட நாட்களில் செய்ய வேண்டாம்.

துலாம்:
உங்களில் 50 வயது தாண்டிய துலாம் ராசிக்காரர்களுக்கு கடன், நோய், எதிர்ப்புகள் பற்றிய கவலைகள் இருக்கக் கூடிய மாதம் இது. சிலருக்கு வேலை மாற்றங்கள் இருக்கும். அது இப்போது கசப்பானதாக தோன்றினாலும் கூட, அடுத்த வருடம் நீங்கள் நிலை கொள்ள வேண்டிய சில இடங்களுக்கு இப்பொழுது உங்களை நகர்த்தக்கூடிய நல்ல மாற்றங்கள்தான் நடக்கும். துலாம் ராசிக்காரர்கள் எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய மாதம் இது. சிலருக்கு தூர இடங்களுக்கான பயணங்கள் உண்டு, அவைகளால் உடனே லாபம் இல்லாதது போல தோன்றினாலும் கூட அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நீங்கள் நன்றாக இருக்க வேண்டிய சில நிலைகளை அது செய்யும்.

90 களில் பிறந்த இளைய பருவத்தினருக்கு நல்ல மாற்றம் இப்போது உண்டு. 2022ம் வருடம் அப்படி ஒன்றும் நல்லவைகளை செய்யவில்லை என்ற எண்ணத்தில் இருக்கக்கூடிய துலாம் ராசிக்காரர்களுக்கும் மாற்றங்கள் உண்டு. பிடிக்காத வேலையைச் செய்து கொண்டிருப்பவர்களுக்கு திறமைக்கேற்ற பிடித்தமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சமீபத்தில் இன்டர்வியூ சென்று வந்தவர்கள் நல்ல பதிலை அடைவீர்கள்.

பிள்ளைகளுக்கும், பெற்றவர்களுக்கும் தலைமுறை இடைவெளி வரும். பெரியவர்கள்தான் விட்டுக் கொடுத்து போக வேண்டி வரும். நீங்கள் உங்கள் தகப்பனாரிடம் வாழ்ந்த காலம் வேறு. தற்போதைய இளைஞர்களின் காலம் வேறு என்பதை உணர்ந்து கொண்டால் வயதான துலாம் ராசிக்காரர்கள் பிரச்னையை சுலபமாக சமாளித்து விடுவீர்கள்
செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும்.

சகோதர சகோதரிகளுக்கு நீங்கள்தான் உதவி செய்யும்படி இருக்கும். என்னதான் அவர்களுக்கு செய்தாலும் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்வதையும் கேட்க வேண்டியிருக்கும். கிரெடிட் கார்டு பேமண்ட் செலுத்த முடியாத நிலை உங்களில் சிலருக்கு உண்டு. அதற்காக கடன் வாங்குவீர்கள். அதிலும் சிக்கல்கள் வரும். வியாபாரிகளுக்கு தொழில் நன்றாக இருப்பது போல தோன்றினாலும் லாபம் இருக்கும். ஆரம்பம் கலக்கத்துடன் ஆரம்பித்தாலும் நிறைவு நன்றாகவே இருக்கும் கவலை வேண்டாம்.

1,2,5,6,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 6-ம் தேதி மதியம் 3:30 முதல் ஒன்பதாம் தேதி அதிகாலை 1:44 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் சொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

விருச்சிகம்:
விருச்சிகத்திற்கு குறை சொல்ல முடியாத மாதம் இது. கோட்சார நிலையில் கிரகங்கள் அனைத்தும் அதிர்ஷ்டங்களை தரும் அமைப்பில் இருப்பதால் அடுத்த வருடம் முழுவதும் உங்களுக்கு கிடைக்க இருக்கின்ற நன்மைகளை அடையாளம் காட்டும் விதமாக இந்த டிசம்பர் இருக்கும். கோட்சார நிலைமைகள் இத்தனை சாதகமாக இருந்தும் விருச்சிக ராசிக்காரர்கள் யாராவது நல்லவை நடக்காமல் கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருந்தால் அவர்களின் பிறந்த ஜாதகப்படி சரியில்லாத தசா புக்திகள் நடந்து கொண்டிருக்கும் என்பது ஜோதிட விதி. அப்படிப்பட்டவர்கள் முறையான தெய்வ வழிபாடுகளை செய்வது நல்லது.

சுபரான குரு வலுவான நிலையில் ஐந்தாமிடத்தில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் உங்களுக்கு தொந்தரவுகளை கொடுத்து கொண்டிருந்த எதிரிகளின் கொட்டம் ஒடுங்கும் மாதம் இது. ஜாதகத்தில் யோக தசாபுக்திகள் நடந்து கொண்டிருப்பவர்கள் கடன் தொல்லை, ஆரோக்கிய குறைவு ஆகியவற்றை சுலபமாக ஜெயிப்பீர்கள். இந்த மாதம் பொருளாதார சிக்கல்கள் இருக்காது. வேலையில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரம் செழிப்பாக நடக்கும்.

சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடும். சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும்.

கணவன், மனைவி உறவு சுமாராக இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு மட்டும் உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். சிலருக்கு பங்குத்துறையில் லாபமும், நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சாதகமாக முடிவதும், திரும்ப வராது என்று கைவிட்ட பணம் கிடைத்து சந்தோஷப்படுதலும் நடக்கும். ஆசைப்பட்ட குழந்தைப்பேறு கிடைக்கும். சிலருக்கு வீடு, வாகனம், மாறுதலுக்கு உண்டாகும். பெண்களுக்கு சிறப்பான மாதமிது. கணவரும் குழந்தைகளும் உங்களின் பேச்சை கேட்பார்கள். வயதானவர்களின் ஆரோக்கியம் மேம்படும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்னும் சில வருடங்களுக்கு நிறைவுகள் மட்டுமே உண்டு.

1,2,3,8,9,11,12,14 ஆகிய நாட்களில் பணம் வரும். 9ம் தேதி அதிகாலை 1:44 முதல் 11 ம் தேதி மதியம் 1:51 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் அறிமுகம் ஆகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களின் ஏமாற்றங்களுக்கு தீர்வு வரப்போகிறது. கடந்த சில வாரங்களாகவே உங்களைச் சுற்றி நடந்து கொண்டிருக்கின்ற நல்ல மாற்றங்களை நீங்கள் அடையாளம் தெரியக்கூடிய மாதம் இது. அடுத்த வருடத்திலிருந்து உங்களை இருள்தன்மையில் வைத்திருந்த ஏழரைச்சனி முடியப்போவதால் வயதிற்கு ஏற்ற வகையில் வேலை, தொழில், வியாபாரம், சொந்த வாழ்க்கை போன்றவைகளில் உங்களுக்கு என்ன தேவையோ அது நடக்க இருக்கின்ற நல்ல மாதமாக டிசம்பர் அமையும். அனைத்து தரப்பு தனுசு ராசிக்காரர்களும் இனிமேல் கவலைகள் ஒழியப் போகிறீர்கள். உங்கள் முயற்சிகள் எந்த அளவிற்கு இருக்கிறதோ அதற்கேற்ற பலன்கள் அமையும் நல்ல மாதம் இது.

இதுவரை வேலை, தொழில் விஷயங்களில் செட்டில் ஆகாமல் இருப்பவர்கள் ஆறு மாதங்களில் நன்றாக இருக்கப் போவதற்கான அச்சாரம் நடக்கும். கொடுக்கும் வாக்குறுதியை இனிமேல் நல்லபடியாக நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க முடியும். அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும், பேச்சினால் தொழில் செய்ய கூடிய ஆசிரியர்கள் வக்கீல்கள் போன்றவர்களுக்கும் நல்ல மாற்றங்கள் நடக்கக் கூடிய கால கட்டம் இது. அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.

நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இந்த மாதம் கூடுதல் நன்மைகளைத் தரும். அதிகாரப்பதவிகள் தேடி வரும். பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரிகள் ஏற்றம் பெறுவார்கள். பணவரவு நன்றாக இருக்கும். வியாபாரம் கண்டிப்பாக குறையாது. சுயதொழில், வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வாங்கும் கடன் முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கு உபயோகமாகவோ இருக்கும்.

2,3,8,9,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 11ம் தேதி மதியம் 1:51 முதல் 14ம் தேதி அதிகாலை 2:32 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு ஒரே வார்த்தையில் இந்த மாத பலனை சொல்லி விடலாம். எல்லாம் தீரப்போகிறது. மன அழுத்தம் விலகப்போகிறது. கலக்கம் போகப் போகிறது. ஆரோக்கியம் கிடைக்கப் போகிறது. வீடு நிம்மதியாக இருக்கப் போகிறது. வேலை நல்லபடியாக அமைய போகிறது. தொழில் கை கொடுக்கப் போகிறது. காதல் மட்டுமே வாழ்க்கை என்று இருந்தவர்களுக்கு அதுவே வாழ்க்கையாகவும் ஆகப் போகிறது. மகரத்தினரின் வயதிற்கு ஏற்ற வகையில் அனைத்து நல்லவைகளும் நடக்கப் போகின்ற மாதமாக டிசம்பர் இருக்கும். கடந்த மூன்று வருடங்களாகவே உறவுகள், நட்புகளில் விரிசல்கள் ஏற்பட்டு வாழ்க்கையை புரிந்து கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு விடிவு வரப் போகிறது. பணத்தால் தொல்லைகளை அனுபவித்தவர்களுக்கு இனி பணம் கிடைக்கும்.

இதுவரை இருந்த வீண் செலவுகள் இனி மட்டுப்பட்டு வருகின்ற வருமானத்தை இனி ஓரளவிற்கு சேமிக்கவும் முடியும். நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் யாவும் இனிமேல் நடக்க ஆரம்பிக்கும். வேலை இல்லாதவர்கள் மனதிற்கு பிடித்த நல்லவேலை கிடைக்கப் பெறுவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. செட்டில் ஆகாத நடுத்தர வயது மகர ராசிக்காரர்கள் இந்த மாதம் முதல் படிப்படியாக நன்மைகள் நடக்க ஆரம்பித்து வாழ்க்கையில் நிலை கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரால் லாபங்கள் இருக்கும். நீங்கள் கேட்கும் பொருட்களை கணவரோ, மனைவியோ வாங்கி தருவார்கள்.

வழக்கு, கடன்தொல்லைகள், கடுமையான மனஅழுத்தம், குடும்பப் பிரச்சினைகள், குழந்தைகளால் வருத்தங்கள் போன்றவைகளில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் மகரத்தினருக்கு ஆறுதல் தரும் மாதம் இது. பெண்களுக்கு குறைகள் ஏதும் இல்லை. அம்மா வழி ஆதரவும் ஆசிகளும் உண்டு. பிள்ளைகளால் நல்ல விஷயங்களும், தொலைதூரங்களில் இருக்கும் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளும் கிடைக்கும். எல்லாம் சரி ஆனால் கடந்த மூன்று வருடங்களாக நீங்கள் பட்ட அவஸ்தைகள் சூ.. மந்திர காளி என்று இந்த மாதத்திலேயே முடிந்துவிடும் என்று நினைக்காதீர்கள்.

படிப்படியாக நீங்கள் இனிமேல் நன்றாக இருக்கப் போகின்ற அனைத்தும் இனி ஆரம்பிக்கும். பிறக்க இருக்கும் புத்தாண்டு உங்களுக்கு நல்லவைகளை மட்டுமே தரும்.

3,5,7,10,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 14 ம் தேதி அதிகாலை 2:32 முதல் 16ம் தேதி மதியம் 2:04 வரை சந்திராஷ்டம தினம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாது அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் இந்த நாட்களில் யாருடனும் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.

கும்பம்:
கும்பத்தினருக்கு சில முன்னெச்சரிக்கை அனுபவங்கள் நடக்கக்கூடிய மாதம் இது. எல்லாவற்றிலும் நிதானமும் கவனமும் இந்த மாதத்தில் தேவைப்படும். இளைய பருவத்தினருக்கு வாக்குறுதிகளில் கவனம் தேவை. யாருக்கும் எதையும் செய்து தருவதாக பிராமிஸ் செய்ய வேண்டாம். அதே நேரத்தில் 50 வயது கடந்த கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லபலன்கள் இந்த மாதத்தில் இருந்தே ஆரம்பிக்கும். வருமானம் உயரும். நல்ல தொழில் அடையாளம் காட்டப்படும். வியாபாரம் நல்ல படியாக நடக்கும். சிறிதளவு முயற்சி, பெரிய லாபம் என்பது 50 வயது கடந்த கும்ப ராசிக்காரர்களுக்கு உண்டு. இளைய பருவத்தினருக்கு வாழ்க்கையை கற்றுக் கொடுக்கும் சில விஷயங்கள் இனிமேல் ஆரம்பிக்கும் என்பதால் அவர்கள் வேலை தொழில் அமைப்புகளில் இப்போது மாற்றங்களை சந்திப்பார்கள்.

உங்களில் சிலருக்கு காதல் வரும் மாதமிது. எதிர் பாலினத்தவரின் மீது தன்னை அறியாமலேயே கும்ப ராசி இளைஞர்களுக்கு ஈர்ப்பு வரும். இதுவரை நட்பாக பழகி கொண்டிருந்தவர்கள் அதை வேறுவிதமாக உணர ஆரம்பிப்பீர்கள். வட மாநிலங்களுக்கு வேலை நிமித்தமான பயணங்கள் சிலருக்கு உண்டு. சிலருக்கு தூர இடங்களில் வேலை கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிய வேண்டி வரும். ஒரு கருப்பு நிறமுள்ள வேற்றுமதக்காரர் அல்லது காலை விந்தி விந்தி நடப்பவரால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். எதிலும் அடுத்தவர்கள் பேச்சை கேட்காமல் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதை கடைப்பிடிப்பது நல்லது.

இளைய பருவத்து கும்ப ராசிக்காரர்கள் எதிலும் கவனமாக இருங்கள். அகலக்கால் வைக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். பெரிய முதலீடு போட்டு இப்போது தொழில் ஆரம்பிப்பது சரியாக வராது. பங்குச் சந்தையில் கவனமாக இருங்கள். பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுக்குமுன் 100 முறை யோசிக்க வேண்டும். ஏற்கனவே சேமித்து வைத்திருக்கின்ற பணத்தை செலவு செய்ய வேண்டாம். குறிப்பாக உறவுகள், நட்புகளுடன் இணைந்து பண விஷயத்தில் எதையும் செய்ய வேண்டாம். உறவும், நட்பும் கெடும். கூடுமானவரை எதிலும் நேர்மையாகவே இருங்கள். மறைமுக வழிகளை நம்ப வேண்டாம். ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். ஆனால் நான் என்னதான் சொன்னாலும் இந்த வரிகள் உங்கள் மனதில் பதியாது அல்லது இந்த வரிகளை உங்களால் படிக்க முடியாது.

1,2,3,7,10,11,16,17 ஆகிய நாட்களில் பணம் வரும். 16ம் தேதி மதியம் 2.04 முதல் 18 ம் தேதி இரவு 10:30 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கொண்ட தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. ஆயினும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காது.

மீனம்:
30 வயதுக்குட்பட்ட மீன ராசிக்காரர்களுக்கு வேலை, தொழில் அமைப்புகளில் லாபங்களை தரும் மாதமாக டிசம்பர் இருக்கும். இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் போராடி கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இந்த மாதம் ஆறுதலை தருகின்ற மாதமாக இருக்கும். ராசிநாதன் குரு, வலுத்திருப்பதால் இதுவரை கிடைக்காத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பெண்களிடம் உதவிகள் கேட்டிருந்த இளையவர்களுக்கு இந்த மாதம் கேட்டது கிடைக்கும். சிலர் வேலை விஷயமாக மேற்கு திசை நோக்கி போவீர்கள். துயரங்கள் எதுவும் இல்லாத மாதம் இது. இளைஞர்களுக்கு சில முற்றுப்பெறாத அனுபவங்கள் கிடைக்கும்.

உங்களில் சிலர் தேவையற்ற பழக்கங்களை இந்த மாதம் கற்றுக் கொள்வீர்கள். உங்களை திசை திருப்பக்கூடிய நட்புகள் அறிமுகமாகும் மாதம் இது. எதிலும் அக்கறையும் கவனமும் தேவை. யோகாதிபதிகள் நல்ல நிலையில் இருப்பதால் தொழில் அமைப்புகளில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு மாற்றங்கள் உண்டு. சிலருக்கு பார்த்து வந்த வேலையில் மாற்றம் அல்லது வேறு கம்பெனி மாற்றம் இருக்கும். எழுத்துத்துறையில் இருப்பவர்களுக்கு நிச்சய மாற்றம் உண்டு. இப்போது வரும் மாற்றம் எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மைகளைத் தரும் என்பதால் அதனை விரும்பி ஏற்றுக் கொள்வது நல்லது.

தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் நலத்தில் கவனம் வைக்க வேண்டும். கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. நெருப்பு சம்பந்தப்பட்ட வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை. வரும் புத்தாண்டு உங்களுக்கு கொடுக்க இருக்கும் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் மாதமாக இந்த டிசம்பர் இருக்கும். நடுத்தர வயதினருக்கு எவ்வித தொல்லைகளும் வேலை தொழில் அமைப்புகளில் இருக்காது. மீனத்தினருக்கு பெரிய கஷ்டங்கள் எதுவும் இப்போது கண்டிப்பாக வராது. எதற்கும் பயப்படத் தேவையில்லை. பொதுவாகவே நேர்மையும் மனசாட்சியும் உள்ள நல்லவரான உங்களுக்கு எந்த நிலையிலும் பரம்பொருள் கை கொடுக்கும் என்பதே உண்மை.

1,4,5,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 18ம் தேதி இரவு 10:30 முதல் 21 ம் தேதி அதிகாலை 2:57 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்க்கவும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments