இன்ஜின் சாரதிகள் போன்ற விசேட திறன்மிக்க ஊழியர்களின் சேவையை 60 வருட கால எல்லையில் ஓய்வு பெற்ற பின்னரும் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இந்த விடயம் தொடர்பில் கவலை தெரிவித்த போதே குணவர்தன இதனைக் குறிப்பிட்டார்.
அரசாங்கம் அண்மையில் கொண்டு வந்த அரச ஊழியர்களுக்கான 60 வருட வரம்பு காரணமாக விரைவில் ஓய்வுபெற வேண்டிய பல ரயில் சாரதிகள் இருப்பதாகவும், இதே காலப்பகுதியில் கணிசமான எண்ணிக்கையிலான சாரதிகள் ஓய்வுபெறும் பட்சத்தில் புகையிரத சேவை பாதிக்கப்படும் எனவும் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

போதிய தீர்வு கிடைக்காவிட்டால் சேவைக்கு இடையூறு ஏற்படும் என அபேசிங்க எச்சரித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் குணவர்தன, இவ்வாறானதொரு சூழ்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் அத்தகைய ஊழியர்களின் சேவையை அரசாங்கம் தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளும் என்று குறிப்பிட்டார்.