ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்வரும் ஒன்பதாம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு தலைமைத்துவத்தையும் ஆதரவையும் வழங்க தாம் தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மைனா கோ கம போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவரைகாவல்துறையினர் நேற்றுமுன்தினம் கைது செய்த நிலையில், அவரை பார்க்க சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
- Advertisement -
“எதிர்வரும் ஒன்பதாம் திகதி கொழும்பில் இடம்பெறவிருக்கும் போராட்டத்திற்கு இளைஞர்கள் வரவிருந்தனர். இதனை தடுக்கும் முகமாக அரசாங்கம் இளைஞர்களை கைது செய்து வருகின்றது.
மக்களுக்கு தங்கள் உரிமைகளுக்காக போராடவும் நாட்டுக்காக குரல் கொடுக்கவும் உரிமை உண்டு. கடந்த மாதம் ஒன்பதாம் திகதி வந்தது சுனாமியின் முதலாம் அலை. இரண்டாவது அலை வந்து கொண்டு இருக்கிறது. இரண்டாம் அலையின் போது ஆட்சி செய்பவர்கள் போக இடம்தேட வேண்டி வரும்.
மக்கள் போராட்டத்தை இவ்வாறாக கட்டுப்படுத்த நினைத்தால் அது முடியாத காரியம் என்றே நான் கூறுகின்றேன். நான் போராட்டத்தின் தலைவன் அல்ல எனினும் போராட்டக்காரர்களுக்கு எனது ஆதரவை வழங்குவேன்.
போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நானும் நாடாளுமன்றத்தில் அழைப்பு விடுத்திருந்தேன். போராட்டங்களை அடக்க அரசாங்கம் இவ்வாறான முயற்சிகளை எடுப்பார்களேயானால் நாம் ஒருபோதும் அதற்கு இடமளிக்க மாட்டோம்” என்றார்.