முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய காலத்திற்கு முன்னர் பதவி விலகியிருந்தாலும், ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்கான வரப்பிரசாதங்களை அவர் பெறுவார் என ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயதிஸ்ஸ டி கொஸ்தா தெரிவித்துள்ளார்.
1986 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரிமை சட்டத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமையை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவருக்குப் பின்னர் அவரது மனைவியும் அனுபவிப்பர் என எமது செய்தி பிரிவுக்கு அவர் தெரிவித்தார்.
- Advertisement -
இந்த நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளின் பதவிக்காலம் குறித்து ஆராயும் போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அதிக காலம் பதவியில் இருந்துள்ளார். அவர், இரண்டு தவணைகளில் மொத்தமாக 11 ஆண்டுகளும் ஏழு மாதங்களும் ஜனாதிபதி பதவியை வகித்துள்ளார்.
2019 நவம்பரில் ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ஷ, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய முதலாவது ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். அவர் இரண்டு ஆண்டுகளும், ஏழு மாதங்களும் 25 நாட்களும் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார்.