கொரோனா தொற்றானது சமூகப் பரவலாக மாறியுள்ளது என்பதை தெளிவாகக் கூற முடியாத நிலையில், அறிகுறிகளற்ற பல தொற்றாளர்கள் சமூகத்தில் நடமாடுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாட்டில் தற்போதுள்ள கொரோனா தொற்று நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
- Advertisement -
இதன்போதே சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்திருந்தார். மேலும் விளக்கமளித்த அவர்,
“கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் விசேடமாக தொற்று அறிகுறிகள் தென்படாதவர்கள் சமூகத்தில் பரவலாக உள்ளனர்.
கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், தொற்று அறிகுறிகள் இன்றிய நிலையில், முழுமையான தடுப்பூசி மருந்தைப் பெற்றிருந்தால், தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை.
வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார நடைமுறைகளை விடாமுயற்சியுடன் பின்பற்றினால், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை வழமை போன்று கொண்டாட முடியும்.
பூஸ்டர் தடுப்பூசி மருந்தைப் பெற்றிருந்தாலும் புதிய இயல்புநிலையில் இருந்து விலகிச் செல்ல முடியாது” எனக் கூறினார்.
இதேவேளை, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் உபுல் திஸாநாயக்க “கொரோனா வைரசானது மீண்டும் சமூக தொற்றாக மாறியுள்ளதாக” கூறியுள்ளார்.