கோரோனா தொற்றுப் பரவல்; உலகளவில் மில்லியன் கணக்கானவர்கள் புகைத்தலை விட்டுவிட்டனர்

கோரோனா வைரஸை அடுத்து உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் புகைபிடிப்பதை விட்டுவிட்டனர் என்று சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான மக்கள் சிகரெட் பயன்பாட்டை கணிசமாகக் குறைத்துள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

புகைபிடிப்பவர்கள் கோரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ள மருத்துவ நிபுணர்கள், அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படின் உடல்நிலை மோசமாகிவிடும் அபாயம் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பிரிட்டனைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கோரோனா தொற்றின் பின்னர் சுமார் 30 மில்லியன் மக்கள் புகைபிடிப்பதை விட்டுவிட்டனர். அவர்களில் பெரும்பாலோர் மீண்டும் ஒருபோதும் புகைபிடிக்கமாட்டோம் என்று கூறியுள்ளனர்.

லண்டன் இம்பீரியல் கல்லூரியின் சுவாச மருத்துவ நிபுணர் நிக் ஹாப்கின்சன் தெரிவித்துள்ளதாவது;

“புகைபிடித்தல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடும் திறனையும் அழிக்கிறது. கோரோனா வைரஸுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் ஆய்வுகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன.

அத்துடன், புகைபிடித்தல் பல இதய நோய்களை நேரடியாகப் பாதிக்கும்” என்றார்.
கோரோனா வைரஸ் தொற்றுடன், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதற்கான ஒரு திட்டம் தொடங்கப்பட்டது.

பல இலங்கையர்கள் சமீப காலங்களில் புகைபிடிப்பதை விட்டுவிட்டனர். புகைபிடிப்பதை முற்றுமுழுதாகத் தவிர்ப்பதற்கு அதிகமான மக்கள் முடிவு செய்துள்ளனர் என்று ஆரம்ப ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகளவில் புகைபிடித்தலால் ஆண்டுக்கு 8 லட்சம் பேருக்கு மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். மேலும் மில்லியன் கணக்கானவர்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *