எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்பாக வரிசையில் காத்திருந்தவர்கள் மீது பேருந்து மோதியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் மட்டக்களப்பு – ஊறணி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது.
- Advertisement -
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதி ஓரத்தில் மக்கள் மோட்டர்சைக்கிள்களுடன் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சம்பவதினமான இன்று திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் பயணித்த பேருந்து வீதி ஓரத்தில் எரிபொருளுக்காக காத்திருந்தவர்கள் மீது மோதியுள்ளது.
விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பஸ் சாரதி பஸ்வண்டியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இந்த சம்பவத்தில் 5 மோட்டர் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதுடன், பஸ்வண்டியை பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதுடன் சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.