யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் செயற்பாட்டை நிறுத்தி, பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
வட மாகாண ஆளுநரின் செயலாளர் திருமதி எஸ். மேகநாதனால், இத்தகையதொரு வேண்டுகோள் கல்வி அமைச்சின் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
- Advertisement -
அதன் பிரதிகள் தேசிய கொவிட் 19 தடுப்புச் செயலணியின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டிருந்தது.
அந்தக் கடிதத்தில், “நாட்டில் மிக வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் பலவகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில் – நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள பின்னரும் கூட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் பல்கலைக்கழகத்தை இயக்கி வருகிறார்.
இதனால் வேகமாகப் பரவி வரும் கொரோனாத் தொற்று யாழ். மாவட்டத்தில் சவாலாக மாறும் என்று அஞ்ச வேண்டியுள்ளது. எனவே வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற அவரைப் பணிக்க வேண்டும்” என்று கோரப்பட்டிருக்கிறது.