போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்களில் மேலும் ஒருவர் மயக்கமடைந்து அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதியிலிருந்து தமக்கு நிரந்தர நியமனத்தினை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுகாதார பணியாளர்களில் நேற்றைய தினம் மூவர் மயக்கமடைந்து வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இன்றைய தினம் காலை மேலும் ஒருவர் மயக்கமடைந்து அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கடந்த 16 நாட்களாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சுகாதாரப் பணியாளர்கள் கடந்த 8 நாட்களாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் குறித்த சுகாதார பணியாளர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
- Advertisement -
கலந்துரையாடலின் போது ஜனாதிபதியுடன் கதைத்து தீர்வினைப் பெற்றுத் தருவதாக தெரிவித்தது மாத்திரமன்றி அதனை எப்போது பெற்றுத் தருவது என உறுதிமொழி வழங்கவில்லை எனத் தெரிவித்து சுகாதார பணியாளர்கள் நேற்றைய தினம் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்கள்.
எனினும் வடக்கு மாகாண ஆளுநரின் உறுதிமொழி தமக்கு திருப்தி இல்லை என்றதன் அடிப்படையில் தமக்குரிய நியமனம் பெறுவதில் நீண்ட நாட்கள் செல்லக் கூடிய நிலை காரணமாக தமது சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் ஈடுபட்டு வருகின்றார்கள்.
தமக்கு நிரந்தர நியமனத்திற்குரிய சரியான முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகள் தங்களை வந்து சந்தித்து தமது பிரச்சினை தொடர்பில் விசாரித்து செல்வதாகவும் எனினும் இன்றுவரை எவரும் தமது பிரச்சினக்கு தீர்வினைப் பெற்றுத் தரவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.