நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர் ஒருவரை அனுப்பிவைக்க முடியாத நிலையில் இருக்கும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள இருப்பதாகக் கூறுகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சாடியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -

இதன்போது பேசிய அவர், தற்போது ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை விடவும் எமது கொள்கைகள் மாறுபட்டவையாகும். நாட்டுமக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதே எமது கொள்கையாகும். எதிர்காலத்தில் அந்தப் பயணத்தை முன்னெடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
- Advertisement -
எனினும் பொதுஜன பெரமுன அரசாங்கம் கடந்த காலத்திலும் தற்போதும் தத்தமது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக்கொள்வதற்கே முற்படுகின்றார்கள். துறைமுகங்கள், விமான நிலையங்களை நிர்மாணிக்கின்றார்கள். எனினும் அவற்றால் எந்தவொரு வருமானமும் இல்லை. மாறாக அதில் அவர்கள் பெருமளவான நிதியை தமதாக்கிக்கொள்கின்றார்கள்.
பெருமளவான கடன்சுமையில் இருந்து நாட்டையே நாம் கடந்த 2015 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றுக்கொண்டோம். எனினும் நாட்டை மென்மேலும் கடனாளி ஆக்காமல் சிறப்பானதொரு நிர்வாகத்தை முன்னெடுத்துச்சென்றோம்.
ஆனால் 2019 ஆம் ஆண்டின் ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம் புதிதாக பெருமளவில் நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது. இதன் விளைவாக நாட்டிலுள்ள ஏனைய சொத்துக்களின் மதிப்பு வீழ்ச்சியடையும். இவையனைத்தையும் செய்துகொண்டு தான் நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் மீட்டெடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றது என்றார்.