ஜப்பானின் நகோயாவில் உள்ள குடிவரவு குடியகல்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான இலங்கை பெண் ஒருவர் கடந்த மார்ச் 6 ஆம் திகதி உயிரிழந்து விட்டதாக டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகம் நேற்று தெரிவித்துள்ளது. அவரது விசா காலாவதியானதால் கடந்த ஆகஸ்ட் முதல் அவர் தடுப்பு மையத்தில் இருந்தார் என்று தூதரக செய்தித் தொடர்பாளர் நேற்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இலங்கை அதிகாரிகள் ரொஷான் கமகே தலைமையிலான குழு நகோயாவில் உள்ள குறித்த தடுப்பு நிலையத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். கம்பஹாவைச் சேர்ந்த குறித்த பெண் 2017 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு வந்திருந்தார். எனினும், கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது விசா காலாவதியான நிலையில் ஜப்பானிய குடிவரவு அதிகாரிகள் அவரை தடுத்து வைத்திருந்தனர்.

பின்னர் அவர் நகோயா தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் குறித்த பெண் தனக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து தொடர்ந்து முறைப்பாடு அளித்ததாகவும், அதன் காரணமாக அவர் பலவீனமாகிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. ஆறு சந்தர்ப்பங்களில் மருத்துவர்கள் அந்தப் பெண்ணை பரிசோதித்ததாகவும், சுமார் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தூதரக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அந்த வகையில் மரணத்திற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார். “நாங்கள் அறிக்கைக்காக காத்திருக்கிறோம், இது குறித்து நாங்கள் ஏற்கனவே ஜப்பானிய வெளியுறவு அமைச்சகத்திற்கு அறிவித்தோம். இந்த விவகாரம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு ஜப்பானிய நீதி அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார், ”என்று செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.