புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் சில மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். இவ்வருடம் இடம்பெறவுள்ள 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பாக, தெளிவுபடுத்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பொதுவாக ஆகஸ்ட் மாதத்திலேயே இடம்பெறுகின்றது. கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதத்தில் இடம்பெறுகின்றது. என்றாலும் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் சில மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படலாம்.
அத்துடன் இதுதொடர்பாக கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி வருகின்றோம். இது தொடர்பில் உரிய இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னரே பரீட்சைகள் இடம்பெறும் நேரசூசியை அறிவிக்க முடியும்.
குறித்த பரீட்சைகளை உரிய நேரசூசியின் பிரகாரம் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களத்துக்கு முடியுமாக இருக்கின்றபோதும், கொரோனா தொற்று நிலைமையினால் கற்றல் நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்காதமை காரணமாக, சில மாதங்களுக்கு கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் பரீட்சைகளை நடத்துவதற்கே நினைத்திருக்கின்றோம்.
இதன் பிரகாரம் உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளை நவம்பர் மாதம்வரை ஒத்திவைப்பதற்கு ஆலோசித்து இருக்கின்றோம். என்றாலும் இதுதொடர்பான இறுதித் தீர்மானத்தை கல்வி அமைச்சினாலே மேற்கொள்ளவேண்டும் என்றார்.