சீனி இறக்குமதி சம்பந்தமான வரி மோசடி நடந்திருக்காவிட்டால், அந்த வரிப்பணத்தில் 15 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்திருக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற “ மன்னிக்கவும் யார் வென்றது” என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சீனி இறக்குமதி மூலம் மேற்கொள்ளப்பட்ட வரி மோசடி பணத்தை உற்ற நண்பர்கள் மத்தியில் பகிர்ந்துக்கொண்டுள்ளனர். சீனி இறக்குமதிக்கான வரி 50 ரூபாயாக இருந்ததுடன் அந்த வரி 2020 ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரையான காலத்தில் 25 சதமாக குறைக்கப்பட்டால், ஆயிரத்து 590 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இது இலங்கை வரலாற்றில் நடந்த மிகப் பெரிய வரி மோசடி. மத்திய வங்கியில் ஆயிரத்து 100 கோடி மோசடி நடந்துள்ளது, அதனுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய போவதாக கூறிளே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
எனினும் இந்த அரசாங்கம் நாட்டு மக்களின் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்த சீனியில் ஆயிரத்து 590 கோடி ரூபாயை கொள்ளையிட்டுள்ளனர். இந்த அரசாங்கத்தின் கீழேயே இந்த நிதி மோசடி நடந்துள்ளமை நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது எனவும் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்