உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு சர்ச்சையாக கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலரை, தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், காப்பாற்றுவதற்கு முயற்சித்து வருகின்றனர். குறித்த தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மறைக்கப்படுகின்ற நிலை காணப்படுகின்றது என்றார்.
- Advertisement -
முன்னதாக பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்க வேண்டும் என்று விமல் தெரிவித்திருந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், அக்கட்சிக்கள் முரண்பாடுகளையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை காப்பாற்ற முயற்சிப்பதாக தெரிவித்திருப்பது புதிய சர்ச்சைக்கு வழி ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.