கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உலகை அச்சுறுத்தி வந்த கோவிட் – 19 தொற்று தொடர்பான சமூக அச்சம் அகலும் காலம் கனிந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இதில் முதன்மையானது கோவிட் – 19 இற்கு எதிரான தடுப்பு ஊசிகளின் செயல் திறனாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இது தொடர்பில் மேலும் தகவல் வெளியிட்டுள்ள அவர், இன்று கோவிட் வைரசுக்கு எதிராக 19 வகையான தடுப்பு மருந்துகள் உலகின் பல பாகங்களிலும் பாவனையில் உள்ளன. இவை அடிப்படையில் நான்கு வகையினுள் அடங்குகின்றன. தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களில் கோவிட் நோயிற்கு எதிரான நோயெதிர்ப்புச் சக்தி உருவாகின்றது. கோவிட் தடுப்பூசிச் செயற்றிட்டம் கோவிட் பரவலை 40 வீதம் குறைத்து விட்டது. அத்துடன் கோவிட் தொற்றால் இறப்பவர் தொகையியும் 90 வீதத்தால் குறைந்து விட்டது.
- Advertisement -

அடுத்து கோவிட் வைரஸ் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக விகாரமடைந்தும் வருகின்றது. இதில் மூன்று விகாரங்களே அதாவது பிரித்தானியா, தென் ஆபிரிக்கா, பிறேசில் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட விகாரங்களே மனித உடலில் தொற்று வீதத்தை அதிகரித்து அதிக பாதிப்பினை ஏற்படுத்தின. இவ்வாறு விகாரமடைந்த கோவிட் தொற்றுக்களுக்கும் தடுப்பூசி பலன் அளிக்கின்றது. மருத்துவப் பணியாளர்கள், பொதுசன உத்தியோகத்தர்கள் கோவிட் தடுப்பு மருந்து செலுத்துவதனை , முதன்மைப்படுத்துவதற்கு , விகாரமடைந்த பாதகமான கோவிட் தொற்று பரவாது கட்டுப்படுத்துவதே நோக்கமாகும்.
ஏனைய விகாரமடைந்த கோவிட் தொற்று மிதமான நோயறிகுறிகளையே ஏற்படுத்துகின்றது. பொதுவாக தற்போது பரவும் கோவிட் தொற்றானது காலத்துடன் தீவிரத் தன்மை குறைந்த தொற்றாகும். இதன் மூலம் சமூகத்திற்கு மந்தை நிர்பீடனம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இது கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கு சமனானது. எனவே கோவிட் தொற்றத் தொடர்பான தேவையற்ற பீதி தேவையில்லை – கடந்த ஒரு வருடத்திற்கு முன்னைய கெடுபிடி தற்போது இல்லை.
மாறாக சமூக இடைவெளி பேணல், முகக் கவசம் அணிதல், கைகளை தூய்மி கொண்டு கழுவல் ஆகிய சுகநல நடைமுறைகளைக் கடைப்பிடிப்போம். கோவிட் 19 வைரஸ் தொடர்பான வைத்தியசாலை எழுமாற்றுக் கண்காணிப்புப் பரிசோதனைகள் வாயில்களால் கோவிட் 19 பாதகமான மாற்றங்களை உடனடியாகக் கண்டறியலாம். புதிய விகாரமடையும் கோவிட் வைரஸிற்கான தடுப்பு மருந்தினையும் உடனடியாக தயாரிக்கக் கூடிய சூழலும் ஏற்பட்டுவிட்டது. எனவே கோவிட் தொடர்பான அச்சம் எம்மிடம் இருந்து மெல்லவே அகலும் காலம் கனிந்து விட்டது என்றார்.