ஐ.நா மனித உரிமை பேரவையில் ஸ்ரீலங்காவின் பொறுப்புக் கூறல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்கான தீவிர முயற்சிகளில் ஸ்ரீலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது. இதன் ஓரங்கமாக கொழும்பிலுள்ள சர்வதேச நாடுகளின் தூதுவர்களை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அவசரமாக சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பல்வேறு உறுப்பு நாடுகளுடனும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதுடன், ஜெனிவா மனித உரிமை பேரவையில் ஸ்ரீலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றது.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ பல்வேறு உறுப்பு நாடுகளுக்கும் இது தொடர்பாக கடிதங்களை அனுப்பியுள்ள நிலையில், அமைச்சர் தினேஷ் குணவர்தன தொடர்ச்சியாக கொழும்பில் உள்ள மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதுவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, பிரேசில், ஜப்பான், தென்கொரியா, மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்து மனித உரிமைப் பேரவையின் இலங்கை மீதான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும் போது முழுமையான ஆதரவை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
முக்கியமாக கடந்த 24ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெற்ற போது அதில் பல்வேறு நாடுகள் உரையாற்றியிருந்தன. அதில் சில நாடுகள் ஸ்ரீலங்காவுக்கு ஆதரவாக உரையாற்றின. இந்தப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நடைபெறவுள்ளதுடன் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதற்கு ஆதரவு தெரிவிக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கடிதமொன்றை அனுப்பியுள்ளது. இந்தியாவும் ஸ்ரீலங்காவுக்கு முழுமையான ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்க்கின்றது. இந்நிலையில் ஸ்ரீலங்கா தொடர்ச்சியாக இந்தப் பிரேரணையை தோற்கடிப்பதற்காக பல்வேறு இராஜதந்திர நகர்வுகளை பல மட்டங்களிலும் முன்னெடுத்து வருகின்றது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ இது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இவ்வாறான இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றார். அதேபோன்று வெளிவிவகார அமைச்சகம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. அது மட்டுமன்றி வெளிநாடுகளில் இருக்கும் இலங்கை தூதரகங்களின் தூதுவர்களும் இது தொடர்பான பிரசார நடவடிக்கைகளிலும் ஆதரவு திரட்டும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.