ஸ்ரீலங்கா தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில், கடுமையான சொற்பதங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பா உள்ளிட்ட ஏனைய நாடுகள் குழு, அண்மையில் நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், மார்ச் மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இந்த உத்தியோகபற்றற்ற கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. டென்மார்க், நோர்வே, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், லீச்டென்ஸ்டைன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், மேற்கு ஐரோப்பா மற்றும் ஏனைய நாடுகளின் குழுவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
- Advertisement -
ஸ்ரீலங்காவிற்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சொற்களை மேலும் கடுமையாக்க வேண்டும் என இந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்தில் குற்றவாளியை அயல்நாட்டிடம் ”ஒப்படைத்தல்” என்ற சொல்லை உள்ளடக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றஞ்சுமத்தி சிலரை பெயரிடுவதையும் ஸ்ரீலங்காவை இலக்காக கொண்டு குற்றச்சாட்டுகளை முன்வைப்பதையும் கண்டிப்பதாக தெரிவித்துள்ள சீனா, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.