விடுதலைப் போராட்டம் வன்முறைப் போராட்டமாக மாற்றம் பெற்ற பின்னரே, அதிகூடிய பிரச்சினைகளை தாயக மக்கள் எதிர்கொள்ள நேரிட்டதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த கால பாதிப்புக்களில் இருந்து மீண்டு வருவதற்கான சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை, மக்களை தூண்டிவிட்டு அரசியல் நடத்தும் மக்கள் பிரதிநிதிகளுக்கு தாம் வலியுறுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த ஒரு பகுதியினர் மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்துள்ளனர்.
- Advertisement -
நான் அவர்களிடம் கேட்டுக் கொள்ளும் விடயம் என்னவென்றால், இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை நிராகரித்து விடுதலைப் போராட்டத்தை வன்முறைப் போராட்டமாக முன்னிறுத்தியதாலேயே இந்தப் பாதிப்புகள் எல்லாம் ஏற்பட்டிருக்கிறது. ஆகையினால், நாங்கள் அதிலிருந்து மீண்டு வர, உரிய சூழலை ஏற்படுத்த வேண்டும். இது இன்று, நேற்றல்ல. நீண்ட காலமாக நான் சொல்லிக்கொண்டு வருகின்ற ஒரு விடயம் என்றார்.