அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். கொவிட் காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு குறித்து பொதுச் சுகாதார பரிசோதர்கள் கூடுதல் கரிசனை கொண்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தியன் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் கிரமமான திட்டங்களை நடைமுறைப்படுத்தாது சில அறிவிப்புக்களை மேற்கொள்வதனால் தமக்கு பெரும் சிக்கல்கள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார். சடலங்களை அடக்கம் செய்வது குறித்த உரிய ஆலோசனை வழிகாட்டல்களை வெளியிடாது, சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் சடலங்களை அடக்கம் செய்யும் கிரமான விதிமுறைகளை அறிவிக்காது அனுமதி வழங்கியதனால் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். ஆலோசனை வழிகாட்டல்கள் பற்றி அறிவிக்கப்படாத காரணத்தினால் கொவிட் சடலங்களை எவ்வாறு அடக்கம் செய்வது என்பது குறித்து பொதுமக்களை அறிவுறுத்த தம்மால் முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.